காங்கிரஸ் கட்சி குறித்த திமுக அமைச்சர்களின் பேச்சு வலியை தருகிறது என அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இதனால் அக்கட்சி கூட்டணியின் தலைமை கட்சியான திமுகவில் கடும் சலசலப்பு எழுந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்து வராது என இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் தொடர்ச்சியாக மாநில தலைமை இவ்விவகாரத்தில் பெரிதாக கருத்து தெரிவிக்காமல் உள்ளது. ஆனால் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் திமுகவை சீண்டும் வகையில் கருத்துகளை தெரிவித்து வருகிறார். 

அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ்காரர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுகவுக்கு வேலை செய்தோம்.  70 நாட்களாகியும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் குழு காத்திருக்கிறது.  காங்கிரஸ் கட்சி சிறிய படகு அல்ல. அது மிகப்பெரிய கப்பல். திரும்புவதற்கு சிறிது நேரம் எடுக்கும். காங்கிரஸ் கட்சி குறித்த திமுக அமைச்சர்களின் பேச்சு வலியை தருகிறது. திமுக செயலர் காங்கிரஸில் ஆள் இருக்கிறதா என கேட்கும்போது வருத்தமக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தொடர்ந்து பேசிய மாணிக்கம் தாகூர், “எம்பி பதவி எனக்கு முக்கியம் அல்ல. தன்மானம் தான் முக்கியம். காங்கிரஸில் உள்ள கீழ்மட்ட தொண்டர்கள் வரை மரியாதை கிடைக்க வேண்டும். காங்கிரஸ் தன்மானத்தை காட்ட வேண்டும். காங்கிரஸ் கட்சி தான் என் உயிர். மரியாதை, அன்பு தான் கேட்கிறோம். உண்மையான பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியம் காங்கிரஸ் கட்சியினருக்கு தான் உள்ளது. மோடி அரசு ராகுல் காந்தியை பேச விடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன 8 பேரில் 7 பேர் காங்கிரஸ்காரர்கள். ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 

இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் யார் பலமாக சண்டை போடுகிறார்கள் என்பது ஒரு எடுத்துக்காட்டாகும். துணை நிற்கிறோம். துணை நிற்கிறோம் என சொன்னவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். சைடு வாங்கிட்டுபோய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்கு கிடையவே கிடையாது. எங்களை எதிர்த்து அவமானப்படுத்தி கீழ்த்தரமாக பேச நினைத்த அனைவரையும் அதே மொழியில் பதில் சொன்னவன் தான் காங்கிரஸ்காரன். எனவே மதுரை வடக்கு தொகுதி தான் நம்முடைய இலக்கு. அதனை கண்டிப்பாக பெற்றுத் தீர வேண்டும்" என பேசியுள்ளார். 

மேலும், “எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். நீங்கள் செய்த பல தவறுகளுக்கு பழியை சுமந்தவர்கள் நாங்கள். காங்கிரஸை சாதாரணமாக நினைத்து விட்டார்கள். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்” என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என நிர்வாகிகள் சிலர் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.