TN Election 2026 CM Stalin: மனம் விட்டு பேச வேண்டும் என கூறி, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, 6 நிமிட நீளத்திற்கான வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அதன்படி, “தேர்தல் பரப்புரை பரபரப்பாக சென்றுகொண்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக நான் மக்களை சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமாக சிலவற்றை மனம் திறந்து பேச விரும்புகிறேன். இன்னும் கொஞ்ச நாட்களில் வாக்குப்பதிவு. இந்த நேரத்தில் எனக்கு ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது.
”கருணாநிதிய விட ஆபத்தானாவன்”
2021ம் ஆண்டு இதேபோன்று ஒரு சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என சிலர் பேசினர். கருணாநிதியுடன் என்னை எப்போதும் ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என சொன்னதை காட்டிலும் தலைவர் என அழைத்ததே அதிகம். அப்படிப்பட்ட தலைவருடன் என்னை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், நம்முடைய வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்னைக்குமே ஆபத்தானவன் தான். அந்த வகையில் கலைஞரை விட ஒரு படி மேலே இருப்பது எனக்கு பெருமை தான். இதெல்லாம் நம் தமிழர்களின் ரத்தத்திலேயே உள்ளது. எப்போதும் தமிழர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து சண்டை செய்ததை பெருமையாக கருதுகிறேன்.
ஆட்சியின் மீதான விமர்சனங்கள்:
திமுக ஆட்சியில் சில குறைகள் இருக்கின்றன என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிரேன். ஏனென்றால் மக்களின் கருத்துகளையும் நான் காது கொடுத்து கேட்கிறேன். ஆனால், குறைகளாக சொல்லப்படும் சில விஷயங்களில் கூட மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நாம் சிறப்பாகவே இருக்கிறோம். ஆனால், அந்த குறைகளையும் சரி செய்ய நாம் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அதன் விளைவுகளை இன்னும் சிறிது நாட்களில் நாம் பார்ப்போம். தேர்தல் நடக்கும் நேரத்திலேயே தொகுதி மறுவரையை எனும் மசோதா மூலம் ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால், இந்த தேர்தலில் அவர்களது ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயித்துவிட்டால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பாஜக மாதிரியான மதவாத சக்திகள் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதேநேரம், சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் திமுக எப்போது களத்தில் நிற்கும். கலைஞரின் மகனான ஸ்டாலின் இன்று அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன். இப்போதும் ஒரு பிரச்னை என்றால் எதிர்த்து நிற்பவன் தான் இந்த ஸ்டாலின். எந்த நேரத்திலும் திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவும், அவர்களது கொடூரமான சித்தாந்தங்களும் ஜெயிக்க முடியலன்னு வரலாறு சொன்னா போதும்” என முதலமைச்சர் ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
