CM Stalin: ”உங்க வீட்டு படியேறி கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே கொடுத்தீங்களா எடப்பாடி” - ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin TN Election 2026: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாக்கில் நரம்பில்லாமல் பேசி வருவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

CM Stalin TN Election 2026: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் முடிவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின், தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் நேற்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எனக்கு உயிர்கொடுத்து ஆளாக்கிய கலைஞரை நான் வீட்டு சிறையில் வைத்திருந்தேன் என நாக்கில் நரம்பில்லாமல் பேசியிருக்கிறார். தோல்வி பயத்தில் அவர் எல்லை மீறி பேச தொடங்கியிருக்கிறார். முதலமைச்சராக என்னுடைய செயல்பாடுகளை விமர்சிக்க எதிர்க்கட்சி தலைவரான உங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. தேர்தலில் மக்கள் அதனை எடைபோட்டு பார்ப்பார்கள். உங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க தான் போகிறார்கள். ஆனால், கலைஞரின் மகனாக எனது உறவைப்பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த தகுதியும் கிடையாது.
முதுமையால் ஓய்வெடுத்தார்..
கலைஞரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும். அவர் ஒரு சிங்கம். வாழ்நாள் முழுவதும் கோடிக்கணக்கான தொண்டர்களை என் உயிருனும் மேலான உடன் பிறப்புகளே எனும் ஒற்றை மாத்திரத்தில் கட்டிப்போட்டிருந்தவர். முதுமையால் உடல்நலம் சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தார். நினைவாற்றலை இழந்தபோது கூட மருத்துவர்கள் உங்களுக்கு யாரை பிடிக்கும் என கேட்டபோது கூட, அண்ணா.. அண்ணா என சொன்னார். முடியாத நிலையில் கூட அறிவாலயம் போகணும், முரசொலிக்கு போகணும் என துடித்தவர் தான் கலைஞர். அவரை யாராலும் சிறையில் வைக்க முடியாது. அவருடைய இதய சிறையில் தான் நான் உட்பட உடன் பிறப்புகள் அனைவருமே குடியிருந்தோம். கலைஞர் பெயரை சொல்ல்லக்கூட உங்களுக்கு தகுதி கிடையாது. எந்தவித யோக்கியதையும் கிடையாது.
வீட்டு படியேறி கேட்டேனே..
ஐந்துமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்து, தமிழ்நாட்டை நீண்டகாலம் ஆண்ட ஒரே முதலமைச்சர் கலைஞர் தான். அவருடைய கடைசி ஆசை என்ன? அவருடைய தலைவரான அண்ணாவிற்கு அருகே, தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தான். அதற்காக நானே, அப்பாவிற்காக அல்ல தலைவருக்காக நானே உங்கள் வீட்டு படியேறி வந்து கையெடுத்து கும்பிட்டு கேட்டேனே. என்னுடைய தந்தைக்காக அல்ல, தமிழர்களின் தலைவர் அவர். அவருக்கு கடற்கரையில் இடம் கொடுங்கள் என அந்த சோக சூழ்நிலையில் கூட உங்கள் முன்பு வந்து நின்றேனே. கொடுத்தீர்களா? இரக்கம் இல்லாமல் மறுத்தவர் தானே நீங்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு எங்கள் தலைவர் குறித்து பேச எந்த யோக்கியதையும் கிடையாது.
”டாக்ட்ரேட் பழனிசாமி..”
“தமிழ்நாட்டில் எப்படி கால் பதிப்பது, தமிழர்களுக்கு துரோகம் செய்ய யாராவது கிடைப்பார்களா என பாஜக வலைவீசி தேடியபோது கிடைத்தவர்தான் துரோகத்தில் டாக்ட்ரேட் வாங்குன பழனிசாமி. அவர் சொன்னதையும் செய்யமாட்டார், சொந்தமாகவும் செய்யமாட்டார் என மக்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. திமுகவின் திட்டங்களை எல்லாம் காப்பி அடித்து எடப்பாடி புதிய ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார். அவருக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும். மே 4ம் தேதி மக்களின் Judgement Day-வில் (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) உங்களுக்கான தண்டனை கிடைக்கும்!” என முதலமைச்சர் ஸ்டாலின் பாளையங்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















