அன்புமணியைப் பற்றி பேசினால் என் தகுதி குறைந்து விடும் என தர்மபுரியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தர்மபுரியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை அறிமுகப்படுத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அன்புமணி ராமதாஸை கடுமையாக சாடியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதலமைச்சர் ஸ்டாலின் தனது உரையில், “சமூக நீதி போராளி என நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு ஊழல் வழக்குக்கு பயந்து கூட்டணி அமைத்துக்கொண்டு அன்புமணி உலகமகா உத்தமர் போல உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி நான் ஒரு வார்த்தைக் கூட பேச விரும்பவில்லை. அன்புமணியைப் பற்றி பேசினால் என் தகுதி குறைந்து விடும். ஏனென்றால் மருத்துவர் ராமதாஸே இவரைப் பற்றி பேசுவதை கவனித்துப் பாருங்கள். அசிங்கம் என சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்காக இந்த மண்ணில் நடந்த மிக முக்கியமான போராட்டம் 1987ல் ராமதாஸ் தலைமையில் நடந்தது. 

Continues below advertisement

அதிமுகவின் துப்பாக்கிக் குண்டுக்கு 21 போராளிகள் பலியானார்கள். ஆனால் 1989ல் நம்முடைய திமுக ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதி முதலமைச்சரானதும் சேலத்தின் வீரபாண்டி ஆறுமுகம் மூலமாக ராமதாஸை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து விவாதித்தார். ஆட்சிக்கு வந்த 45வது நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுத்தார். இன்றைக்கு கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகள் படித்து வேலைக்கு போய் முன்னேற கருணாநிதி கொடுத்த இட ஒதுக்கீடு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணி மண்டபம் கட்டியது நான் தான். 

ஆனால் சமூக நீதிக்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது அதிமுக. இதே தர்மபுரியில் 3 வேளாண் கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றார்களே அந்த அதிமுக தான். அந்த அதிமுக குற்றவாளிகளை எடப்பாடி பழனிசாமி விடுதலை செய்தார். அவரின் கையை ஒரு பக்கமும், மறுபக்கம் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படக்கூடிய பாஜக கையை பிடித்துக்கொண்டு வருகிறார். 

சமூக நீதிக்கே துரோகம் செய்தவர்கள் மருத்துவர் ராமதாஸூக்கு துரோகம் செய்துள்ளார். அதனால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியை துரோக கூட்டணி என இன்றைக்கு தமிழ்நாடே சொல்கிறது” என தெரிவித்துள்ளார்.