TVK Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் அவரால் பொதுவெளியில் நடமாடவே முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். 

செங்கோட்டையன் மீது கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் தங்களது கட்சி வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ”செங்கோட்டையன் தானாக எம்.எல்.ஏ., ஆகவில்லை. அதிமுக உறவுகள் இரவு பகல் பாராமல் உழைத்ததால் சட்டமன்ற உறுப்பினரானார். ஆனால் சுயநலம், திமிர் மற்று அகங்காரம் காரணமாக அவரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது. கட்சி கட்டுப்பாடுகளை மீறினால் யாராக இருந்தாலும் எந்த காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தொண்டர்களையே மிகவும் கீழ் தரமாக பேசக்கூடியவர் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் மீது கேவலமான புகார்

மனைவியும், மகனும் எப்போதும் தங்களுடைய கணவனும், தந்தையும் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்பார்கள். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சரவை பதவி வழங்கப்பட்டபோது, செங்கோட்டையனின் மனைவி மற்றும் மகனே தலைமை செயலத்திற்கு வந்து முதலமைச்சரிடம் புகாரளித்தனர். அது இரு கேவலமான புகார். கோபி செட்டிப்பாளையம் மக்கள் அனைவருக்குமே அந்த புகார் குறித்து தெரியும். அதைபற்றி நான் வெளிப்படையாக சொல்ல விரும்பவில்லை. அந்த புகார் வந்ததுமே செங்கோட்டையனின் அமைச்சர் பதவியை ஜெயலலிதா பிடுங்கி எறிந்தார். இப்படிப்பட்ட நபரை கட்சியில் வைத்துக்கொண்டது தவறாக போய்விட்டது, குடும்பத்தினரே புகார் அளித்த சம்பவத்தை இப்போது தான் பார்க்கிறேன் என ஜெயலலிதாவே என்னிடம் கூறினார். அப்படிப்பட்ட நபரை என்னுடைய அமைச்சரவையில் சேர்த்தது தான் நான் செய்த தவறு. கெஞ்சி கண்ணீர் விட்டு பதவியை வாங்கினார்.

செங்கோட்டையனுக்கு பணம் ஏது?

ஓட்டு வீட்டில் வசித்து வந்த செங்கோட்டையனுக்கு 30 ஏக்கரில் காலேஜ் கட்ட பணம் எங்கிருந்து வந்தது.  ரெய்டுக்கு பயந்து பணத்தை ஆற்றில் வீசியவர்தான் அவர். செங்கோட்டையனுக்கு எதிராக என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் அவரால் ரோட்டில் கூட நட முடியாது. எனவே அவரை தோற்கடித்த இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையடுத்து செங்கோட்டையன் மீது எடப்பாடி பழனிசாமி சொன்ன அந்த விவகாரமான புகார் என்ன? என்ற விவாதம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசுவது தவறு எனவும், பொதுவாழ்க்கை சார்ந்த விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் பேசி வருகின்றனர்.