சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை குழு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Continues below advertisement

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அக்கட்சியின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இப்படியான நிலையில் தவெகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்து விட்ட நிலையில் நேற்று தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “என்னுடைய குடும்பம் காவல்துறை குடும்பம். என்னுடைய தாத்தா காவல்துறையில் பணியாற்றினார். அவர்களுக்கு இரண்டு பெண்கள். அதில் ஒருவர் திலகவதி ஐபிஎஸ் என்னுடைய பெரியம்மா. இரண்டாவது என் அம்மா. போலீஸ் குடும்பத்தில் வளர்ந்தவன் நான். என் அம்மா படித்து கனவில் ஜெயிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் என்னுடைய அம்மாவின் அம்மா ஒரே சாதியில் உள்ள பையனை கல்யாணம் செய்துக்கொள் என கூறி திருமணம் செய்து வைத்தார்கள். என் அம்மா வாழ வந்த இடத்தில் வறுமை, கடன், பொருளாதார சூழல் என பல பிரச்னைகளுக்கு நடுவே என் கண் முன்னால் அம்மா தற்கொலை செய்துக் கொண்டார்.

Continues below advertisement

அப்போது எனக்கு ஐந்து வயது தான் இருக்கும். அங்கிருந்து உருவாக்கப்பட்ட தனிமை 13 வயதில் ஆசிரியரால் தணிந்தது. நான் படித்துக் கொண்டே இருந்தேன். அம்பேத்கரை படித்தேன். சாதியினால் தான் என் அம்மா தற்கொலை செய்துக் கொண்டார். ஏன் சாதி ஒழிக்கப்போட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. விளையாட்டுத்துறையினர் இடஒதுக்கீட்டில் எனக்கான கல்வியை நானே உருவாக்கினேன். 

நான் ஏழை தான். ஆனால் வேலை தெரிந்தவன். எனக்கு காதல் திருமணம் நடந்தது. நான் ஏழையாக இருந்ததால் இன்றைக்கு வரை அது விமர்சனம் செய்யப்படுகிறது. ஒரு ஏழை பணக்காரன் ஆகக்கூடாது என சமூகம் சொல்கிறது. சிறு நிதி வங்கி உருவாக்கி ஏழு ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். அதிலிருந்து கிடைத்த முதலீட்டை வைத்தே அரசியலுக்கு வந்தேன். 15 வயதிலேயே நான் அரசியலுக்கு வர வேண்டும் என முடிவு செய்து விட்டேன். 

என் உறுதியை உடைக்க முடியாது. என் அம்மா இறக்கும் தருவாயில் அக்கா மாதிரி என்னால் தைரியமாக முடிவு எடுக்க முடியவில்லை. காலம் முழுக்க உண்மையாகவும், தைரியமாகவும் வாழு. எதற்காகவும், யாரைப் பார்த்தும் பயப்படாத என சொன்னார்கள். ஒவ்வொரு செயலை செய்யும்போது அந்த வார்த்தைகளை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.