Annamalai: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக-வின் வலுவான கூட்டணியை எதிர்த்து அதிமுக கூட்டணி களமிறங்குகிறது. அதிமுக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக பாஜக இடம்பிடித்துள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் பெற்ற பாஜக இந்த தேர்தலில் 27 தொகுதிகள் பெற்றுள்ளது.

Continues below advertisement

அண்ணாமலைக்கு நோ சான்ஸ்:

தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்து முடிப்பதற்கு 6ம் தேதியே கடைசி நாள் என்ற நிலையில், 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இந்த பட்டியலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.

ஏனென்றால், ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து பாஜக-வில் இணைந்த அண்ணாமலை, அவர் தலைவராக பதவி வகித்த 2021 முதல் 2025 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பாஜக-வை மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சியடைய வைத்தார். பாஜக-வின் செல்வாக்கை காட்டிலும் அண்ணாமலையின் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்தது.

Continues below advertisement

ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை:

ஆனால், கூட்டணி கட்சித் தலைவர்களுடனான மோதல், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடான மோதல், சர்ச்சைக் கருத்துக்கள் காரணமாக அண்ணாமலைக்கு கட்சியில் எதிர்ப்பும் அதிகரித்து வந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிய அண்ணாமலையின் சர்ச்சைப் பேச்சிற்கு பிறகு முறிந்த அதிமுக - பாஜக கூட்டணி, அவரின் தலைவர் பதவி பறிககப்பட்ட பிறகே மீண்டும் இணைந்தது.

இந்த சூழலில், தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டது முதலே ஓரங்கட்டப்பட்டு வந்த அண்ணாமலைக்கு கோவை மண்டலத்தில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக-விற்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வானதி சீனிவாசன்தான் போட்டியிடுவார் என்று கருதப்பட்ட நிலையில், அவரே வேட்பாளராக களமிறங்கியுள்ளார். எஞ்சியுள்ள 26 தொகுதிகளில் ஒரு தொகுதியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அப்செட்டில் ஆதரவாளர்கள்:

திமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என 3 போட்டிகளுக்கு மத்தியில் களமிறங்கும் பாஜக-வின் சார்பில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது அக்கட்சி தொண்டர்கள் பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் பாஜக-வின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் அபாயமும் உண்டாகியுள்ளது.

கட்சியில் நீண்ட நாட்களாக முக்கிய பொறுப்பு வழங்கப்படாமலே இழுத்தடிக்கப்பட்டதும், கோவை வந்த பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை அழைக்கப்படாததும், தற்போது வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாததும் என அண்ணாமலையைத் தொடர்ந்து ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால், அவர்கள் மிக கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலில் எதிரொலிக்குமா?

அவர்களின் அதிருப்தி இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக, அவரது செல்வாக்கு அதிகம் நிறைந்த கொங்கு மண்டலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல, அண்ணாமலை தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரப்புரையிலும் இதுவரை ஈடுபடாமல் உள்ளார். கேரள பாஜக-விற்கு ஆதரவாக மட்டுமே அவர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். 

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலைக்கு பாஜக-வில் மீண்டும் முக்கியத்துவம் வழங்கப்படுமா? அல்லது அண்ணாமலை வேறு ஏதேனும் முக்கிய முடிவு எடுப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.