TN Election 2026: திமுக Vs அதிமுக - கூட்டணிக்கு கொடுத்ததும், இழந்ததும் - ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
TN Assembly Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Assembly Election 2026: கடந்த 2021ம் ஆண்டு பொதுத்தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி வெற்றி பெற்ற தொகுதிகள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான தேர்தல் களம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே கூட்டணியை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் மிகவும் முனைப்பு காட்டி வருகின்றன. திமுக வரும் 22ம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் பேச உள்ளதாக அறிவித்துள்ளது. அதிமுக ஏற்கனவே கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீட்டை பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. தேதி அறிவித்த பிறகு கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்து சென்று நேரத்தை வீணடிக்க விரும்பாலம், முன்கூட்டியே தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய இரண்டு பிரதான கட்சிகளும் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், கடந்த 2021ம் தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக, தனது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
திமுக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள்:
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மதிமுக இந்திய யூனியன் முஸ்லீக் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன. திமுக நேரடியாக 174 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், சிறிய கூட்டணி கட்சிகளின் 14 வேட்பாளர்களையும் தங்களது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட செய்தது. இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 45.7 சதவிகித வாக்குகளை பெற்று இந்த கூட்டணி மொத்தமாக 159 இடங்களை வென்றது. திமுக மட்டுமே 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
| கட்சி | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
| திமுக | 173 | 125 |
| காங்கிரஸ் | 25 | 18 |
| விடுதலை சிறுத்தை கட்சிகள் | 6 | 4 |
| இந்திய கம்யூனிஸ்ட் | 6 | 2 |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 6 | 2 |
| மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் | 6 (உதயசூரியன் சின்னம்) | 4 |
| இந்திய யூனியன் முஸ்லீம் லீக் | 3 | 0 |
| கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி | 3 (உதயசூரியன் சின்னம்) | 1 |
| மனிதநேய மக்கள் கட்சி | 2 (உதயசூரியன் சின்னம்) | 2 |
| அனைத்து இந்தியா ஃபார்வர்ட் ப்ளாக் | 1 (உதயசூரியன் சின்னம்) | 0 |
| தமிழக வாழ்வுரிமை கட்சி | 1 (உதயசூரியன் சின்னம்) | 1 |
| மக்கள் விடுதலை கட்சி | 1 (உதயசூரியன் சின்னம்) | 0 |
| ஆதி தமிழர் பேரவை | 1 (உதயசூரியன் சின்னம்) | 0 |
திமுக கூட்டணி வாக்கு சதவிகிதம்:
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் திமுகவின் வாக்குகளாக கணக்கிடப்பட்டு, 2021ம் ஆண்டு தேர்தலில் இந்த கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 45.7 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.
- திமுக - 38%
- காங்கிரஸ் - 4.3%
- விசிக - 1%
- இந்திய கம்யூனிஸ்ட் - 1.1%
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 0.9%
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 0.5%
அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கிய தொகுதிகள்:
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற பிரதான கட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதில் அதிமுக 179 இடங்களில் நேரடியாக களம் கண்டது. அதுபோக பல கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய, 12 தொகுதிகளில் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் களமிறக்கப்பட்டன.
| கட்சிகள் | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றி பெற்ற தொகுதிகள் |
| அதிமுக | 179 | 65 |
| பாமக | 23 | 5 |
| பாஜக | 20 | 4 |
| தமிழ் மாநில காங்கிரஸ் | 6 (இரட்டை இலை சின்னம்) | 0 |
| பெருந்தலைவர் மக்கள் கட்சி | 1 (இரட்டை இலை சின்னம்) | 0 |
| தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் | 1 (இரட்டை இலை சின்னம்) | 0 |
| மூவேந்தர் முன்னேற்ற கழகம் | 1 (இரட்டை இலை சின்னம்) | 0 |
| அனைத்து இந்தியா மூவேந்தர் முன்னேற்ற கழகம் | 1 (இரட்டை இலை சின்னம்) | 0 |
| புரட்சி பாரதம் | 1 (இரட்டை இலை சின்னம்) | 1 |
| பசும்பொன் தேசிய கழகம் | 1 (இரட்டை இலை சின்னம்) | 0 |
அதிமுக கூட்டணி வாக்கு சதவிகிதம்:
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் அதிமுகவின் வாக்குகளாக கணக்கிடப்பட்டு, 2021ம் ஆண்டு தேர்தலில் இந்த கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணி 45% வாக்குகளை பெற்றுள்ளது.
- அதிமுக - 33.5%
- பாமக - 3.8%
- பாஜக - 2.6%
ஏமாற்றும் தேசிய டூ மண்டல கட்சிகள்
தேசிய கட்சிக்கு உள்ள ஆதரவு தொடங்கி, ஒரு மாவட்டத்தில் உள்ள சமூக மற்றும் சமய வாக்குகள் வரை அனைத்தையும் தங்களுக்கு ஆதரவாக அறுவடை செய்யும் நோக்கிலேயே, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கூட்டணியை அமைத்துள்ளன. அதில் திமுகவிற்கு காங்கிரஸ் தொடங்கி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிகளின் பங்களிப்பு நல்ல பலனை அளித்துள்ளது. அதேநேரம், அதிமுக கூட்டணிக்கு பாஜக தொடங்கி, தமிழ் மாநில காங்கிர்ஸ் வரையிலான பல கட்சிகளின் பங்களிப்பு பலவீனமாகவே அமைந்ததை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இந்த தேர்தலில் அந்த கணக்குகள் எப்படி மாற உள்ளன? தொகுதி ஒதுக்கீட்டில் என்ன மாற்றம் ஏற்படக்கூடும்? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






















