திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுக - அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. மேலும் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாம் தமிழர் சீமான் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யாதது வேட்பாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.அதனைத்தொடர்ந்து திமுக சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், அதிமுக தரப்பில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் தூசி மோகன் ஆகியோர் பிரசாரம் செய்துவருகின்றனர். பாஜக சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஆகியோரும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தும் அவர்களுக்கு ஆதரித்தும் வாக்குகள் சேர்த்தனர்.மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் அதிமுக ,திமுக இரு தரப்பும் திருவண்ணாமலை மாவட்டத்தில் அசுர பலத்துடன் களத்தில் சுழன்றாலும் பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் சூறாவளி பிரச்சாரத்தால் ஆட்டம் கண்டுள்ளனர்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு 'உதயசூரியன், இரட்டை இலை சின்னம்' என்ற மிகப்பெரிய அஸ்திரம் இருந்தாலும், உள்ளூர்காரர் என்ற முத்திரையுடன் போட்டியிடும் வேட்பாளர்கள் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை பெறும் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் அவர்களது பிரச்சாரத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த நெருக்கடியும் மீறி அவர்கள் பிரச்சார பயணத்தை தொடர்கின்றனர். உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டு அதனை தீர்த்து வைப்பதாக கூறி அவர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே பிரதான கட்சியான திமுக அதிமுகவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் இருக்கட்சியிலும் உட்கச்சி பூசலும் அவர்களுக்கு தலைவலியை அதிகரிக்க செய்துள்ளது.
திமுகவிடம் கூட்டணி வைத்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒருசில இடங்களை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் கூட்டணி கட்சி கேட்ட இடத்தில் இவர்கள் தராததால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் திமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாமக தனித்து களம் காண்பதால், அவர்களது வாக்குகளை ஈடு செய்வதில் அதிமுகவுக்கு கடும் சவாலாக உள்ளது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனும் முழக்கத்துடன் தனித்து களம் காணும் பாஜக கட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் பண பலத்துடன் உள்ள வேட்பாளர்களை மட்டும் தேர்வு செய்து களம் இறக்கி உள்ளதால் ஒரு சில வார்டுகளில் திமுக ,அதிமுக கட்சியினருக்கு நெருக்கடி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள், மக்களை சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் செய்தும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நான்கு நகராட்சிகளிலும் திருவண்ணாமலை நகராட்சி முதல் முறையாக பெண் நகர மன்ற தலைவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் வெற்றி பெற்றால் நகர மன்ற தலைவராக நிர்மலா ,பிரியா,இந்து ஆகிய மூவரில் ஒருவரும் அதேபோல் அதிமுகவில் அல்லி , செல்வி இவர்களில் ஒருவருக்கு நகர்மன்ற தலைவராக பதவி ஏற்பார். திருவண்ணாமலை மாவட்டத்தின் கோரிக்கைகள் குடிநீர், சாலை வசதி, குப்பைகள் அகற்றம், கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பை கிடங்கில் குப்பை குவியல், புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பேருந்து சேவை ஆகிய பிரதான கோரிக்கைளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்கள், தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருபவர் யார் என முடிவு செய்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாகை சூட்டப்படும். இந்த சவாலான நெருக்கடியிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் நகர்மன்ற தலைவராக வெற்றி பெற்ற போவது யார்? என கேள்வி எழுந்துள்ளது