திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும் , செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த அனைத்து கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பேலட்ஷீட் ஓட்டுமிஷினில் பொறுத்த வலியுறுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.அன்பழகன் தலைமையில் அதிமுக வேட்பாளர் ஏ.கலைச்செல்வி , பாமக வேட்பாளர் லோகேஷ், பாஜக வேட்பாளர் தங்கராஜ், தேமுதிக வேட்பாளர் சண்முகம், அமமுக வேட்பாளர் தனசேகர் மற்றும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;
பெரணமல்லூர் பேரூராட்சியில் வாக்குப்பதிவு மையங்களில் வாக்குசெலுத்தும் இயந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆன்லைன் பதிவு (ரேன்டமைசேஷன்) செய்ய வேண்டும். ஆனால் திருவண்ணாமலையிலிருந்து பெரணமல்லூர் பேரூராட்சிக்கு வந்த வாக்குபதிவு இயந்திரத்தில் ஆன்லைன் பதிவு (ரேன்டமைசேஷன்) செய்து வந்துள்ளதாகவும் அதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்கள் கையொப்பமிட வேண்டுமென தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுள்ளனர். எனவே பிரதான எதிர்க்கட்சி மற்றும் தேசிய கட்சி மாநில கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இதனை சரி செய்து தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவும்.
பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் ஓட்டு மிஷின் பேலட்ஷீட் பொருத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தி பெரணமல்லூர் பேரூராட்சி அலுவலகத்திலேயே 2 நாட்களுக்குள் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர் முன்னிலையில் குலுக்கல் முறையில் (ரேன்டமைசேஷன்) பேலட்ஷீட் ஓட்டுமிஷினில் பொறுத்த வேண்டும். என்றும் இல்லையேல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அனைத்து கட்சி வேட்பாளர்களும் புறக்கணிப்போம் என மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பா.முருகேஷ் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா இருந்தார்.