தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி வந்தவாசி, திருவத்தியூர் (செய்யார்) ஆகிய 4 நகராட்சிகளும் 10 பேரூராட்சிகளும் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் 123 வார்டுகளில் 2,56,274 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சையாக களம் காணும் வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
வந்தவாசி நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகளில் 34 வாக்கு சாவடிகளும், 26,724 வாக்காளர்களும் உள்ளனர். 24 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ரீனா இளவரசி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்பொழுது ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பேண்டு வாத்தியம், முழங்க வீதி வீதியாக குத்தாட்டம் போட்டுக்கொண்டு ஊர்வலமாக வந்தார்.
அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர். மேலும் கரகாட்டம் பார்ப்பதற்காக பொதுமக்கள் அங்கு குவிந்தனர் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து வேட வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ரீனா கூறுகையில் நான் வார்டு கவுன்சிலில் வெற்றி பெற்றால் எனது வார்டில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு அனைவருக்கும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றி தருவேன் என்றும், அப்பகுதியில் பட்டா இல்லா மக்களுக்கு இலவச பட்டா ஏற்படுத்தி தரவும், முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை பெற்றுத் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.