தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சியைப் பிடிப்பதற்கு தேவையான பெரும்பான்மை இல்லாமல் தவெக தவித்து வருகிறது.

Continues below advertisement

காங்கிரஸ் 5 எம்எல்ஏ-க்களுடன் ஆதரவு அளித்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவிற்காக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைக் கோரியிருந்தனர். கம்யூனிஸ்ட் ஆதரவை அளித்துள்ள நிலையில், இந்த சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவிற்காக தமிழக வெற்றிக் கழகம் காத்திருக்கிறது. 

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவியா?

விசிக ஆதரவு அளிக்க வேண்டுமென்றால் திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவியை விசிக நிபந்தனையாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று கருதப்படுகிறது. 

Continues below advertisement

திருச்சி கிழக்கில் திருமா:

விடுதலைச் சிறுத்தையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையை தவெக நடத்தி வரும் சூழலில், விஜய் தான் ராஜினாமா செய்ய உள்ள 2 தொகுதிகளில் ஒரு தொகுதியில் திருமாவளவனை வேட்பாளராக களமிறக்கவும் விசிக தரப்பில் நிபந்தனை விதிக்கப்படுகிறது. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் பட்சத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக சட்டமன்ற உறுப்பினராக விஜய் ராஜினாமா செய்யும் தொகுதியிலே போட்டியிட உள்ளார்.

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய 2 தொகுதியிலும் வெற்றி பெற்ற விஜய் தற்போது திருச்சி கிழக்கு தொகுதியிலே ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது. இதனால், திருச்சி கிழக்கிலே அவர் வேட்பாளராக களமிறங்குவார் என்று கருதப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க போராடும் தவெக:

மே 4ம் தேதி முடிவுகள் வெளியாகியும் கடந்த 4 நாட்களாகவே தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஒவ்வொரு கட்சியினருடனும் ஆதரவு கோரி அலைந்து வந்தனர். விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சியினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

தவெக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு கோரியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தங்களது கூட்டணி எப்போதும் திமுக-வுடனே என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். அதேசமயம், கம்யூனிஸ்ட், மாரக்சிஸ்ட் மற்றும் விசிக ஆகியோருடன் தவெக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.  இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய கம்யூனிஸ்ட் தங்களது ஆதரவை அளித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதற்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. திருமாவளவனின் முடிவிற்காகவே தமிழக வெற்றிக் கழகம் காத்துள்ளது.

கடந்த தேர்தலில் இந்த கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பிடித்து தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் தலா 5 தொகுதிகளில் போட்டியிட்டனர். விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். விஜய்க்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து இவர்கள் வெளியேறுகின்றனர்.