புதிய அமைச்சரவையில் டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு. திமுக தொண்டர்கள் வருத்தம்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 16-வது சட்டப்பேரவையில் புதிதாக ஆட்சி  அமைத்துள்ளனர்.  இதில் அமைச்சர்கள் பட்டியலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் யாருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்காததால் டெல்டா மாவட்டங்களில் திமுகவினர் தங்களது வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தனி பெரும்பன்மையுடன் தமிழகத்தில், இன்று ஆட்சி பொறுப்பு ஏற்று உள்ளது. இந்நிலையில்  ஆளுநர் மாளிகையில் 34 பேர் கொண்ட அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.




இந்த பட்டியலில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 7 ல் திமுகவும், திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் 2 தொகுதி திமுகவும் ஒரு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் இரண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் திமுகவும், அதன் கூட்டணி கட்சியும்  வெற்றி பெற்றுள்ளது. 




அதாவது டெல்டா மாவட்டங்களில் மொத்தமுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சி கைப்பற்றியிருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் திமுகவின் புதிய அமைச்சரவையில் திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், திருவாரூர் பூண்டி எஸ்.கலைவாணன் மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா,  ஆகியோரது பெயர்கள் இடம்பெறக்கூடும் என திமுகவினரால் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், தற்போது 
பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களில் 15 எம்எல்ஏக்களின் பெயரும் இடம் பெறாததால் திமுகவினரும், டெல்டா மாவட்ட மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.





2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது டெல்டா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பகோணம் கோசி.மணி, திருவாரூர் உ.மதிவாணன் ஆகியோர் மட்டுமே அமைச்சர்களாக பதவி வகித்தனர்.2011-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் திமுகவில் 23 பேர் மட்டுமே வெற்றி பெற்றநிலையில் திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர்.
திமுகவுக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் தொகுதிகளில் டெல்டா மாவட்ட தொகுதிகளை குறிப்பிடலாம். எனவே இந்த மாவட்ட மக்களின் பிரதிநிதிகளை அமைச்சரவையில் இடம் பெறச் செய்ய  முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என டெல்டா மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு தற்போது ஏமாற்றத்தை அளித்து இருப்பது வேதனை தருவதாக திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.




தற்போது 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கும் நிலையில் கூடுதலாக அமைச்சர்கள் நியமிக்க வாய்ப்பிருக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் கூடுதல் துறை ஒதுக்கப்பட்டு, அதில் டெல்டாவிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே டெல்டா மக்களின் எதிர்பார்ப்பு.