திமுக வலுவான கூட்டணியுடன் அமோக வெற்றி பெற்று வருவதால், 2026 சட்டமன்ற தேர்தலிலும் ஸ்டாலின் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கூட்டணி தொடர்வதைப் பொறுத்தே இது அமையும்.
TN Election 2026: கருணாநிதியால முடியல, ஸ்டாலின் செய்வாரா? MGR, ஜெயலலிதா லிஸ்டில் இணைவாரா? கூட்டணி பலம்?
TN Election 2026 CM list: நடப்பாண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் படைத்த சாதனையை, முதலமைச்சர் ஸ்டாலின் ஈடு செய்வாரா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

TN Election 2026 CM list: தந்தை கருணாநிதியால் முடியாததை, நடப்பாண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மூலம், அவரது மகன் ஸ்டாலின் செய்வாரா? என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதற்கு பொதுமக்களையும் தயார் செய்யும் வகையில், கடந்த கால தேர்தல் வரலாறு குறித்த பல்வேறு தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டில் இதுவரை முதலமைச்சராக இருந்த நபர்கள் யார்? யார் எத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர்? நீண்டகாலம் அந்த பதவியை வகித்த நபர் யார்? காமராஜர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உள்ள பட்டியலில் கருணாநிதிக்கு இடமில்லாதது ஏன்? தந்தையால் முடியாததை ஸ்டாலின் செய்து காட்டுவாரா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
16 தேர்தல்கள்..12 முதலமைச்சர்கள்..
கடந்த 1952ம் ஆண்டு தொடங்கி கடந்த 2021ம் ஆண்டு வரையில், தமிழ்நாட்டில் 16 முறை சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தினாலும், 1967ம் ஆண்டிற்கு பிறகு திமுக மற்றும் அதிமுக எனும் இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 12 பேர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளனர். குறிப்பிடத்தக்க விதமாக மறைந்த மூத்த அரசியல் தலைவரான நெடுஞ்செழியன் தமிழ்நாட்டின் முதல் செயல் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதாவது 1969ம் ஆண்டு அண்ணாதுரை மறைந்த பிறகும், 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைந்த பிறகும் இடைக்கால செயல் முதலமைச்சராக நெடுஞ்செழியன் செயல்பட்டார். ஆனால், செயல் முதலமைச்சர் என அதிகாரப்பூர்வமாக அவர் எங்கும் அடையாளப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டின் நீண்டகால முதலமைச்சர்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்த பெருமை கருணாநிதியையே சாரும். 1969, 1971, 1989, 1996 மற்றும் 2006 என ஐந்து முறை முதலமைச்சராக பதவியேற்று, 6 ஆயிரத்து 863 நாட்கள் அந்த பதவியை வகித்து வந்தார். அதாவது சுமார் 18 ஆண்டுகள் 9 மாதங்கள் மாநிலத்தின் முதலமைச்சராக கருணாநிதி செயல்பட்டுள்ளார். ஒருவேளை எமர்ஜென்சி (1976) மற்றும் விடுதலைப் புலிகள் உடனான தொடர்பு (1996) என குறிப்பிட்டு, இரண்டு முறை திமுகவின் ஆட்சி கலைக்கப்படாமல் இருந்து இருந்தால், கருணாநிதியின் பதவிக்காலம் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளை கடந்து இருக்கக் கூடும். இந்த பட்டியலில் 6 முறை முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் 4,100 நாட்களுக்கும் அதிகமாக அதாவது 14 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பதவியை வகித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பதவி - சுவாரஸ்ய தகவல்
- நீண்ட காலம் முதலமைச்சர் பதவியை வகித்தவர் - மு. கருணாநிதி (சுமார் 18 ஆண்டுகள், 9 மாதங்கள்)
- நீண்ட காலம் முதலமைச்சர் பதவி வகித்த இரண்டாவது நபர் - ஜெ. ஜெயலலிதா (14 ஆண்டுகளுக்கும் அதிகமாக)
- தொடர்ச்சியாக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் - காமராஜர் (9 வருடங்கள், 172 நாட்கள்)
- தமிழ்நாட்டில் முதலமைச்சரான முதல் நடிகர் - எம்.ஜி. ராமச்சந்திரன் (1977)
- மிகக் குறுகிய காலம் முதலமைச்சராக இருந்த நபர் - ஜானகி ராமச்சந்திரன் (23 நாட்கள்)
- தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக முறை பொறுப்பேற்றவர் - ஜெ. ஜெயலலிதா (6 முறை)
- சிறை தண்டனை பெற்று முதலமைச்சர் பதவியை இழந்த நபர் - ஜெ. ஜெயலலிதா
- நீண்டகாலம் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி - அதிமுக (கடந்த 49 ஆண்டுகளில் சுமார் 31 ஆண்டுகள்)
தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் பட்டியல்
| முதலமைச்சர் பெயர் | பதவியேற்ற நாள் | கடைசி நாள் | கட்சி |
| ராஜகோபாலாச்சாரி | 10, ஏப்ரல் 1952 | 13, ஏப்ரல் 1954 | காங்கிரஸ் |
| காமராஜர் | 13, ஏப்ரல் 1954 | 2, அக்டோபர் 1963 | காங்கிரஸ் |
| பக்தவச்சலம் | 2, அக்டோபர் 1963 | 5, மார்ச் 1967 | காங்கிரஸ் |
| அண்ணாதுரை | 6, மார்ச் 1967 | 3, பிப்ரவரி 1969 | திமுக |
| நெடுஞ்செழியன் (செயல் முதல்வர்) | 3, பிப்ரவரி 1969 | 10, பிப்ரவரி 1969 | திமுக |
| கருணாநிதி | 10, பிப்ரவரி 1969 | 31, ஜனவரி 1976 | திமுக |
| குடியரசு தலைவர் ஆட்சி | 31, ஜனவரி 1976 | 29, ஜுன் 1977 | |
| எம்.ஜி. ராமச்சந்திரன் | 30, ஜுன் 1977 | 17, பிப்ரவரி 1980 | அதிமுக |
| குடியரசு தலைவர் ஆட்சி | 17, பிப்ரவரி 1980 | 8, ஜுன் 1980 | - |
| எம்.ஜி. ராமச்சந்திரன் | 9, ஜுன் 1980 | 24, டிசம்பர் 1987 | அதிமுக |
| நெடுஞ்செழியன் (செயல் முதல்வர்) | 24, டிசம்பர் 1987 | 7, ஜனவரி 1988 | அதிமுக |
| ஜானகி ராமச்சந்திரன் | 7, ஜனவரி 1988 | 30, ஜனவரி 1988 | அதிமுக |
| குடியரசு தலைவர் ஆட்சி | 30, ஜனவரி 1988 | 26, ஜனவரி 1989 | - |
| கருணாநிதி | 27, ஜனவரி 1989 | 30, ஜனவரி 1991 | திமுக |
| குடியரசு தலைவர் ஆட்சி | 30, ஜனவரி 1991 | 23, ஜுன் 1991 | - |
| ஜெயலலிதா | 24, ஜுன் 1991 | 12, மே 1996 | அதிமுக |
| கருணாநிதி | 13, மே 1996 | 13, மே 2001 | திமுக |
| ஜெயலலிதா | 14, மே 2001 | 21, செப்டம்பர் 2001 | அதிமுக |
| ஒ. பன்னீர்செல்வம் | 21, செப்டம்பர் 2001 | 2, மார்ச் 2002 | அதிமுக |
| ஜெயலலிதா | 2, மார்ச் 2002 | 12, மே 2006 | அதிமுக |
| கருணாநிதி | 13, மே 2006 | 15, மே 2011 | திமுக |
| ஜெயலலிதா | 16, மே 2011 | 27, செப்டம்பர் 2014 | அதிமுக |
| ஒ. பன்னீர் செல்வம் | 28, செப்டம்பர் 2014 | 23, மே 2015 | அதிமுக |
| ஜெயலலிதா | 23, மே 2015 | 5, டிசம்பர் 2016 | அதிமுக |
| ஒ. பன்னீர் செல்வம் | 6, டிசம்பர் 2016 | 15, பிப்ரவரி 2017 | அதிமுக |
| எடப்பாடி பழனிசாமி | 16, பிப்ரவரி 2017 | 6, மே 2021 | அதிமுக |
| மு. க. ஸ்டாலின் | 7, மே 2021 | திமுக |
அடுத்தடுத்து வெற்றி பெற்ற முதலமைச்சர்கள்:
1977, 1980 மற்றும் 1985 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அடுத்தடுத்து முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி எம்,ஜி.ஆர்., வெற்றி பெற்றார். அதேபோன்று 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அடுத்தடுத்து வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார். முன்னதாக 1952ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி சார்பில் 1954ம் ஆண்டு காமராஜார் ஆனார். அதன் பிறகு 1957 மற்றும் 1962 ஆகிய இரண்டு தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளராகவே களமிறங்கி வெற்றி பெற்றார்.
கருணாநிதியால முடியல.. ஸ்டாலின் சாதிப்பாரா?
இதனிடையே, தமிழ்நாட்டில் நீண்டகாலம் முதலமைச்சர் என்ற பெருமையை கருணாநிதி பெற்று இருந்தாலும், தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்களில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி அவரால் இறுதி வரை வெற்றி பெற முடியவில்லை. 1971ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சரானாலும், 1969ம் ஆண்டு அண்ணாவின் மறைவிற்கு பிறகு அந்த ஆட்சியின் இடைக்காலத்திலேயே கருணாநிதி முதலமைச்சரானார். அதாவது 1967ம் ஆண்டு தேர்தலில் அவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, காமராஜார், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவை போன்று, ஸ்டாலினும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெறுவாரா? என்பதே திமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திமுகவின் கூட்டணி பலம்
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய வலுவான கூட்டணியை அமைத்த பிறகு, திமுக எதிர்கொண்ட எந்தவொரு தேர்தலிலும் தோல்வியையே சந்திக்கவில்லை. 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கூட்டணி அப்படியே தொடர்வதால், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என கருதப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் உடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தேர்தல் வரை நீடிக்குமா? அல்லது கூட்டணி முறிவுக்கு வழிவகுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.






















