தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 2 மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.


தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநராக இருந்தபோதே, மக்கள் ஆளுநராகப் பணியாற்றினேன். தீவிரமாக மக்கள் பணியாற்றவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன். 


தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு கட்சித் தலைமை தடை விதிக்கவில்லை.  ஆளுநர் பதவிக் காலத்தில் எனது அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளது. நான்கரை ஆண்டுகால எனது பதவிக் காலத்தில் 4 முதலமைச்சர்கள் மற்றும் 2 தேர்தல்களை சந்தித்துள்ளேன். எனது விருப்பத்தின் பெயரில், மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்’’ என்று தெரிவித்து இருந்தார்.


குடியரசுத் தலைவர் ஏற்பு


இந்த நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தர்ராஜனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 2 மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.


இதன்படி, ஜார்க்கண்ட் ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய பதவிகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வகிக்க உள்ளார்.


தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட தமிழிசை


அடிப்படையில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தமிழக பாஜக தலைவர் ஆக இருந்தவர். தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தருணங்களில், தெரிவித்து இருந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக இருந்தவர்.


2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் அதிமுக கூட்டணியில் தமிழிசை செளந்தர்ராஜன் போட்டியிட்டார். எனினும் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார். 


தெலங்கானா ஆளுநர்


அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழிசை செளந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அதை அடுத்து, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.


இந்த நிலையில் மீண்டும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வகையில், தமிழிசை தனது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.