பாஜக தமிழகத்தில் மலர்ந்தே தீரும் என அழுத்தமாக முழக்கமிட்டவர், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன். வேல் யாத்திரை, வெற்றி வியூகம் என பாஜகவை வேறு லெவலுக்கு எடுத்துச் செல்ல கடந்த காலங்களில் ரொம்பவே சிரத்தை எடுத்தார் முருகன். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிட்ட அவர், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முன்னணியில் தான் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழிக்கு தொடர்ந்து ‛டப்’ கொடுத்தார். முதல் 13 சுற்றுகளும் எல்.முருகனுக்கு வீர வேல், வெற்றி வேலாக அமைந்தது.
14வது சுற்றில் திடீரென கயல்விழி முன்னிலை பெற, இரண்டு பேருக்குமான வித்தியாசம் கணிசமாக குறைந்தது. அதுவே அடுத்தடுத்து இழுப்பறி நிலைக்கு மாறியது. எப்படியும் தாமரை மலர்ந்துவிடும் என முழு நம்பிக்கையில் வாக்கு எண்ணும் மையத்தில் காத்திருந்தார் எல்.முருகன்.
எண்ணிக்கையும் அதற்கு ஏற்றார் போல் தான் நகர்ந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான ஓட்டுகளில் இவருக்கும் இடையே நெருப்புப்பொரி பறந்து கொண்டிருந்தது. 23வது சுற்றுவரை பெரு மூச்சு விடும் அளவிற்கு வித்தியாசம் ஒருவருக்கு ஒருவர் உரசிக் கொண்டிருந்த நிலையில், 24வது சுற்றில் உதயசூரியன் சூடுபிடித்தது. அந்த சுற்றில் 600 வாக்குகள் முன்னிலை பெற்றார் கயல்விழி. இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இனி என்ன நடக்குமாே என விரல் நகத்தை வேட்பாளர்கள் மட்டுமல்லாமல், பூத் ஏஜண்டுகளும் கடிக்கத் துவங்கினர்.
இறுதிச் சுற்றான 25வது சுற்று துவங்கப் போகிறது என்றதுமே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் ‛லப் டப்’ சத்தம், அனைவருக்கும் அதிகரித்தது. எண்ணிக்கை நடந்து கொண்டிக்கும் போதே திமுக வேட்பாளர் 500 வாக்குகள் முன்னிலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இயந்திரம் பாதியில் பழுதடைய, அவ்வளவு தான் பாஜகவினர் அதை பிடித்துக் கொண்டனர். எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கோதாவில் இறங்கினர். மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு அளித்ததால், பாஜகவினரிடம் திமுகவினரும் பதிலுக்கு மல்லுக்கட்ட துவங்கினர். இதனால் இரவில் தெரிய வேண்டிய முடிவு, நள்ளிரவு வரை இழுபறியில் இருந்தது.
இறுதியில் இயந்திரங்கள் மறு எண்ணிக்கை செய்யப்பட்டு, சரிபார்த்து திமுக வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை தபால் வாக்கு முன்னிலையோடு ஒப்பிட்டு கயல்விழி வெற்றி பெற்றதாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.
தாராபுரத்தில் தாமரை மலரும் என ஆவலாய் காத்திருந்த தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் அனைவரும், வாடிய தாமரையாய் வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர். இருப்பினும் கடுமையான போட்டி கொடுத்த வகையில், தாராபுரத்தில் தாமரை மலர முயற்சித்தது; இறுதியில் சூரியன் அங்கு உதித்தது.