18-வது மக்களவைக்கான முதற்கட்டத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனு தாக்கலில் பெரும் பரபரப்பு இல்லாவிட்டாலும், காலையிலிருந்தே அரசியல் கட்சிகளின் சதுரங்க நகர்த்தல்கள் உச்சத்தில் இருந்தன.


4 முனை போட்டியில் அணிகள்:


கூட்டி, கழித்து, அனைத்துக் கட்சிகளும் கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியில் ஐக்கியமாகிக் கொண்டன. எனவே, தற்போது உறுதியாக தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதில், கடந்த முறை தமிழகத்தில் மகத்தான வெற்றிப் பெற்ற திமுக தலைமையிலான “I.N.D.I.A”, பாஜக தலைமையிலான N.D.A, அஇஅதிமுக தலைமையிலான ஓர் அணி மற்றும் தனித்துக் களமிறங்கும் நாம் தமிழர்  என நான்கு அணிகள் போட்டியிடுகின்றன.


இதில் திமுக-வைப் பொறுத்தமட்டில், கடந்த தேர்தலின் போது இடம்பெற்ற கட்சிகளே இம்முறையும் அணியில் உள்ளன. திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இவை தவிர்த்து, கமல்ஹாசனின் ம.நீம மற்றும் சிறு, குறு என பல கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 


பாஜக அணியைப் பொறுத்தமட்டில், பாமக, தமாகா, புதிய நீதி கட்சி, அமமுக, ஓபிஎஸ் தரப்பு, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேர்தலில் களமிறங்க உள்ளன. இந்த அணிக்கும் சில சிறு, குறு கட்சிகளின் ஆதரவு இருக்கிறது.


மெகா கூட்டணி அமைப்போம் எனக் கூறி வந்த அஇஅதிமுக-வைப் பொறுத்தமட்டில், தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த அணிக்கும் வெளியிலிருந்து சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.


நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தமட்டில், இந்தமுறையும் தனித்தே 40 தொகுதிகளிலும் களம் காண்கிறது. விரைவில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் விழாவுடன், பரப்புரையைத் தொடங்குகிறார் அக் கட்சியின் தலை, சீமான். 


போட்டியின் முதற்கட்டத்தில் முந்துவது யார்?
இந்த நான்கு முனைப் போட்டியில், திமுக அணியில் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். பாஜக-வில் சிறு கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதிமுக அணியில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழரில் பல வேட்பாளர்கள் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டனர். எனவே, இம்முறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. 


இந்த நான்கு அணிகளில், திமுக அணி, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வரும் வெள்ளிக்கிழமை முதல் ஸ்டாலின் பரப்புரை என கிடுகிடுவென போட்டியில் முந்துகிறது. பாஜக மற்றும் அஇஅதிமுக-வில் தற்போதுதான் தொகுதி உடன்பாடே முடிந்திருக்கிறது. எனவே, பாஜக-விற்கு டெல்லி தலைமை எப்போது வெளியிடுகிறதோ, அப்போதுதான் தேர்தல் அறிக்கை.  விரைவில் மக்களைக் கவரும் அம்சங்களுடன் அறிக்கை வெளியிடுவோம் எனக் கூறியுள்ளது அதிமுக. நாம் தமிழர் அறிக்கை குறித்து எந்தத்தகவலும் அதிகாரப்பூர்வமாக இதுவரை இல்லை.


கடந்த தேர்தலின் வாக்குச் சதவீதங்கள், இந்த முறை பல்வேறு ஊடகங்கள் நடத்திய தேர்தல் கணிப்புகள் ஆகியவற்றில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் திமுக அணி அமோகமாக முந்துகிறது. ஆனால், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற கணக்கில், பாஜக பரப்புரையில் மோடி, இம்முறை தமிழகத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்பாராத தோல்வியை திமுக அணி சந்திக்கும் எனப் பேசியுள்ளார். மறுபக்கத்தில், எதிர்பார்த்த கூட்டணி அமையாவிட்டாலும், அதிமுக-வின் பலம் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தனித்துப் போட்டியிட்டு வெற்றிக் கண்ட ஜெயலலிதா போல், தாங்களும் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் நகர்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.  வழக்கம்போல், குறிப்பிட்ட சதவீத வாக்குகளைக் கவர்ந்து, முத்திரைப்பதிக்கும் முயற்சியில் உள்ளார் சீமான். 


எதிர்பாராததை எதிர்பார்க்கலாமா?
நமது தேர்தல் பயணத்தின்போது, அரசுகளுக்கு எதிராக சில, பல கோபம் இருந்தாலும், எதிர்ப்பு அலை எதுவும் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் பெரும்பாலும் வெற்றி, தோல்வியை கூட்டணி கணக்குகள் நிர்ணயிக்கும் விதத்தில்தான், வாக்குகள் பதிவாகும் என்பது தேர்தல் வரலாற்றின் பல பக்கங்கள் உறுதி செய்கின்றன. ஆனால், இந்தத் தேர்தலில், கூட்டணி மட்டுமல்ல, கட்சிகளின் வாக்குறுதிகளும் முக்கிய பங்காற்றும் என நாம் சந்தித்த பல முதல்முறை வாக்காளர்கள் கூறுகின்றனர். அலசி, ஆராய்ந்து, எங்களது முதல் வாக்கினைப் பதிவு செய்ய இருக்கிறோம் என நம்பிக்கையுடன் நம்மிடம் தெரிவித்தனர். 


இந்தியா முழுவதும் ஒரு கணக்கு என்றால், தமிழகத்தில் ஒரு தனி கணக்கு வாக்காளர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமான சொல்லாடலான எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வகையில், இந்தமுறை திமுக அணி (கடந்த முறை 38 தொகுதிகளில்தான் வெற்றி) அனைத்திலும் வெற்றிப் பெறுமா அல்லது பாஜக அணி அதிர்ச்சி கொடுத்து வெற்றிக்கனியைத் தட்டிச் செல்லுமா அல்லது அதிமுக-வின் இரட்டை இல்லை வெற்றிச்சின்னமாக மாறுமா, சீமான் வெற்றிக்கணக்கை தொடங்குவாரா என பல கேள்விகள் எழுகின்றன. வரும் 19-ம் தேதி, இந்த தேர்தலில் தமிழகத்தின் கணக்கை, வாக்காளர்கள் பதிவு செய்கிறார்கள். ஜூன் 4-ம் தேதி தமிழகத்தின் வெற்றியாளரை நாம் அனைவரும் காண இருக்கிறோம். 


ABP நாடுவின் வேண்டுகோள்
இந்தியாவில் தமிழகத்தில் முதற்கட்டத் தேர்தல் மட்டுமல்ல, அனைத்துக் கட்டங்களிலும் அதிகபட்ச தொகுதிகள் அதாவது 39 தொகுதிகளிலும் தேர்தலைச் சந்திக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாத தேர்தல் பரப்புரைகள் மட்டுமல்ல, வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் இருக்கும் நிச்சயம்  எதிர்பார்ப்போம். 


அதுமட்டுமல்ல, 100 சதவீக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. எனவே, ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஜனநாயக கடமையான வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே, ஏபிபி  நாடு டிஜிட்டல் செய்தித்தளத்தின் வேண்டுகோளும்.