2026  தமிழக சட்டமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழக சட்டமன்ற தேர்தல் 

பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10% சதவிகிதம் வாக்குகள் பதிவானது. 18 வயது 100 வயதை கடந்தவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இதனால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என அப்போதே பேச்சு எழுந்தது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. 

முதலமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் என 4 பேர் களமிறங்கினர். திமுக கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இணைந்தன. அதேசமயம் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு தலா 117 தொகுதிகளில் ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. தவெக தலைவர் விஜயும் 233 தொகுதிகளிலும் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினார். சேலம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுத்தார். அந்த தொகுதி வேட்பாளர் பண பேரம் மூலம் எதிர்க்கட்சியிடம் சரணடைந்ததால் அக்கட்சியினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

Continues below advertisement

சுமார் ஒரு மாத காலம் தமிழக அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் களைகட்டியது. 

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 125 முதல் 145 வரை வாய்ப்பிருப்பதாக என்.டி.டி.வி பீப்பிள்ஸ் பல்ஸ் மற்றும் ரிபப்ளிக் - பி மார்க் நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய 122-132 தொகுதிகளிலும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நடத்திய கணிப்பில் 145-160 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவைப் பொறுத்தவரை என்.டி.டி.வி பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் 65-80 தொகுதிகளிலும், ரிபப்ளிக் - பி மார்க் 65-85 இடங்கள் வரையிலும், மேட்ரிஸ் 87-110 தொகுதிகளிலும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில் 50-65 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. 

முதல்முறையாக களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிட்ட வெற்றியை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.டி.வி பீப்பிள்ஸ் பல்ஸ்  நிறுவன கணிப்பில் 18-24 தொகுதிகளிலும், மேட்ரிஸ் 10-12 தொகுதிகளிலும், ரிபப்ளிக் - பி மார்க்  16-26 இடங்களிலும், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் 13-18 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.