Tamil Nadu Election Live Result 2021 : வென்றது திமுக..
தமிழக தேர்தல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மே 2-ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவிருக்கின்றன.
ABP NADULast Updated: 03 May 2021 06:46 AM
Background
தமிழக தேர்தல் 2021 கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மே 2-ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவிருக்கிறது....More
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021க்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது. 157 முன்னிலை பெற்று திமுக கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
பாஜக வானதி சீனிவாசன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போராடி வெற்றி..
794 வாக்குகள் வித்தியாசத்தில் வி ராமுவை வீழ்த்தி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனை விட சொற்ப வாக்குகள் பின்தங்கி கமல்ஹாசன் தோல்வி.
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தோல்வி அடைந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மக்களின் தீர்ப்பை ஏற்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார் டிடிவி.
அதிகபட்ச வாக்குகளில் வெற்றி பெற்ற வேட்பாளராகிறார் ஐ.பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை 1லட்சத்து 34 ஆயிரத்து 104 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்கிற பெருமையை தனி நபராக பெறுகிறார் ஐ.பெரியசாமி.
தமிழகத்தில் ஆட்சி அமைக்கவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‛மாநில நலனுக்கு கொரோனா ஒழிப்புக்கும் இணைந்து பணியாற்றுவோம்,’ என தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்து டுவிட் செய்துள்ள ஸ்டாலின், ‛நிச்சயம் இணைந்து பணியாற்றுவோம்’ என்றும் கூறி, வாழ்த்துக்கு பிரதமருக்கு நன்றிதெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
கோவில்பட்டியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து பின்னிலையில் இருந்த அவர், கடம்பூர் ராஜூவை விட குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினர். அவர் மட்டுமின்றி அவரது கட்சியும் தமிழகம் முழுவதும் படுதோல்வியை சந்தித்தது.
தாராபுரம் வாக்கு எண்ணிக்கை நிறைவு: ஒரு இயந்திரம் பழுதால் முடிவு அறிவிக்க தாமதம்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் அனைத்து சுற்றுகளும் எண்ணப்பட்ட நிலையில் 500 வாக்குகள் பின்னடைவு. ஒரு இயந்திரம் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை தடைபட்டுள்ளது. தபால் வாக்குகளில் திமுக 861 வாக்குகள் முன்னிலை.
கோவை தெற்கு தொகுதியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த மநீம தலைவர் கமல், கடந்த சில சுற்றுகளாக பின்தங்கினார். அதே நேரத்தில் வானதியில் வாக்குகள் அதிகரித்தது. மொத்தமுள்ள 26 சுற்றுகளில் 24 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 1114 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் முறையே கமல் மற்றம் மயூரா ஜெயக்குமார் உள்ளனர். இன்னும் இரண்டு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. இதைத் தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகள் பலரும் ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்திக்க குவிந்து வருகின்றனர். சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி ரவி, கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அன்மின் சிறப்பு டிஜிபி கந்தசுவாமி, வருண் குமார் ஐ.பி.எஸ், ஜாங்கிட் , அப்பல்லோ மருத்துவமனையின் துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, சாரங்கன் ஐ.பி.எஸ், ஷக்கில் அக்தர் ஐ.பி.எஸ், அதுல்லிய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் அடுத்தடுத்து ஸ்டாலின் இல்லத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு முன்பாக குவிந்த தொண்டர்கள்
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இலத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பதிவு செய்துள்ளன. இந்நிலையில், திமுக தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 6வது முறையாக திமுக ஆட்சியமைக்க கட்டளையிட்ட தமிழக மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். காலையிலிருந்து தனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திமுக வேட்பாளரை விட குறைவான வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். காலையிலிருந்தே மாறி மாறி முன்னிலை பின்னிலையில் இருந்த ராஜேந்திர பாலாஜி, இறுதியில் குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்- ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயு
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவான முன்னிலையில் உள்ளது. இதனால் திமுக தலைவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அதிமுக வேட்பாளர் ரவி 28054 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் பெற்று ரவி வெற்றி பெற்றார்.
'இது மிகவும் தகுதியான வெற்றி'-ஸ்டாலினுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வாழ்த்து
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தச் சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில்,"மிகவும் தகுதியான வெற்றியை பெற்றுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள், உங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகள் "எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தச் சூழலில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தனது வாழ்த்தை பதிவு செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களை அவர் பூர்த்தி செய்ய எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் கமல் முன்னிலை: நெருங்கி வருகிறார் வானதி
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் 14 வது சுற்றின் முடிவுகள்:
காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் 22536
பா.ஜ.க வானதி சீனிவாசன் 26400
ம.நீ.ம கமலஹாசன் 27589
1189 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த வானதி, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் வெற்றி
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17062 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
உதயநிதி ஸ்டாலின் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திமுக சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கோணி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 152 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதில் திமுக வேட்பாளர்கள் 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 127 வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
குன்னூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராமச்சந்திரன் 4105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 61820 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விவேக் 57715 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.
குன்னூரில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 4105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 61820 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 57715 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன், தற்போது 1166 வாக்குகள் பின்தங்கியுள்ளார். 47832 வாக்குகள் அவர் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி 48998 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திடீர் திருப்பம்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 87 வாக்குகள் முன்னிலை
காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன் தொடர்ந்து பின்னடைவில் இருந்த நிலையில் தற்போது 87 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். துரை முருகன் 55177 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 55090 வாக்குகளும் பெற்றுள்ளனர்
விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் 73261 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி
விளாத்திகுளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் 73261 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாகை கீழ்வேளூர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி
நாகை மாவட்டம் கீழ்வேளூர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட அதிக வாக்குகள் பெற்று மாலி வெற்றி.
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுகவின் பன்னீர்செல்வம் முன்னிலை
குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2267 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் தற்போது முன்னிலை பெற்றுள்ளார்.
வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி: முதல் வெற்றியை பதிவு செய்தது அதிமுக
கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர் 66474 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகம் 53309 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
வால்பாறை தொகுதியில் அதிமுகவின் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்தை விட 12,365 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.
கொரோனா பரவும் சூழலில் பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கொரோனா பரவும் சூழலில் பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக் கூடாது. அத்துடன் வெற்றி சான்றிதழ் கிடைக்க தாமதமானால் தலைமையை தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தொண்டர்கள் வீட்டிலிருந்தே வெற்றியை கொண்டாட வேண்டும்- டி.கே.எஸ்.இளங்கோவன்
அண்ணா அறிவாலயத்திற்கு முன்பாக திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தேர்தலும் வெற்றி கொண்டாட்டம் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி இந்தக் கொண்டாட்டத்தை தடுக்க தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன், "தொண்டர்கள் அவர்களின் வெற்றி களிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தொண்டர்கள் அனைவரும் கட்சியின் வெற்றியை தங்களுடைய வீடுகளிலிருந்து கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் தலைவரின் அறிவுரையாக உள்ளது. நாங்கள் சமூக பொறுப்பை உணர்ந்த அரசியல் கட்சி" எனத் தெரிவித்துள்ளார்.
தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்பு திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கொண்டாட்டத்தை தடுக்க தவறியதற்காக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டியில் அதிமுக முன்னிலை; இரண்டாம் இடத்தில் திமுக-அமமுக கடும் போட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அமமுக-திமுக இடையே இரண்டாம் இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. திமுக சின்னத்தில் போட்டியிடும் பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன், இரண்டு, மூன்று இடங்களுக்கு மாறி மாறி வருகிறார்.
திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் தொடர்ந்து பின்னடைவு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராமு, கணிசமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரத்தின் எண்கள் மாற்றமாக இருப்பதாக கூறி முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.1 மணி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வாக்கு இயந்திரத்தின் எண்கள் மாற்றப்பட்டு இருந்ததால் அதிருப்தி அடைந்த வாக்குசாவடி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் வாக்குசாவடியில் பதற்றம் நிலவுகின்றது.
திண்டுக்கல்லில் 1 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு இயந்திரத்தின் எண்கள் மாற்றமாக இருப்பதாக கூறி முகவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்.1 மணி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் 7 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று அண்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது இந்நிலையில் இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வாக்கு இயந்திரத்தின் எண்கள் மாற்றப்பட்டு இருந்ததால் அதிருப்தி அடைந்த வாக்குசாவடி முகவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் வாக்குசாவடியில் பதற்றம் நிலவுகின்றது.
தேர்தலில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
கொரோனா பரவல் காரணமாக தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்தச் சூழலில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள் ஈடுபட்ட செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கொண்டாட்ட தடையை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய 5 மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்னடைவு
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் எம்.சி.சம்பத் 1224 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுகவின் ஐயப்பன் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆலந்தூரில் திமுகவின் வேட்பாளர் தா.மோ.அன்பரசன் 6394 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பின்னடைவை சந்தித்து வருகிறார்.
ஆவடி தொகுதியில் 24ஆயிரத்திற்கும் மேல் வாக்குகளில் அமைச்சர் பாண்டியராஜன் பின்னடைவு
ஆவடி தொகுதியில் திமுகாவின் நாசர் 24302 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளார்.
அமைச்சர் வேலுமணி தொகுதியில் 133 வாக்குகள் பெற்ற மன்சூர் அலிகான்
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி, திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் போட்டியிடும் நிலையில் அமைச்சர் வேலுமணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
அதே தொகுதியில் போட்டியிட்ட நடிகர் அன்சூர் அலிகான் வித்தியாசமான பிரசாரங்கள் மூலம் அந்த தொகுதி மட்டுமல்லாமல், தமிழக வாக்காளர்களின் கவனத்தை பெற்றார். இதுவரை 10 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மன்சூர் அலிகான் 133 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக எஸ்.பி.வேலுமணி 47,074, திமுக கார்த்திகேய சிவசேனாபதி திமுக 22107 வாக்குகள் பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர்பாபு மீண்டும் முன்னிலை
சென்னை துறைமுகம் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வந்த திமுக வேட்பாளர் சேகர் பாபு தற்போது 370 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் வினோஜ் பி செல்வம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
விருதுநகரில் 5 சுற்று முடிவில் திமுகவின் ஏ.ஆர்.ஆர்.ஶ்ரீனிவாசன் 16393 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் இருக்கும் பாஜகவின் பாண்டுரங்கன் 12726 வாக்குகள் பெற்று உள்ளார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேல் வாக்கு வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலை
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் 58,813 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை
சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் 16819 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தற்போது வரை உதயநிதி ஸ்டாலின் 21654 வாக்குகள் பெற்றுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலை
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுகவின் அமைச்சர் செல்லூர் ராஜூ 1206 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். திமுகவின் சின்னம்மாள் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
5வது சுற்றில் முன்னிலை பெற்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முதல் சுற்று துவங்கியது முதலே பின்னடைவை சந்தித்து வந்தார். இந்நிலையில் ஐந்தாவது சுற்றில் திடீரென முன்னிலை பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி மூன்றாவது சுற்று அதிமுக 39 97 திமுக 35 23 தற்போது 350 வாக்கு வித்தியாசத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை.
TN Election Results 2021 Live Updates : அமைச்சர் பாண்டியராஜன் தொடர்ந்து பின்னடைவு
ஆவடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மாபா பாண்டியராஜன், வாக்கு எண்ணிக்கை துவங்கிய நேரத்திலிருந்து பின்னடைவில் உள்ளார். தற்போது 10 ஆயிரம் வாக்குககள் பின்னடைவில் உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். இருப்பினும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அவர்களை விட கூடுதலாக 130 பிளஸ் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
துறைமுகம்: திமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த பாஜக
துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சேகர்பாபு பின்னடைவை சந்தித்து வருகிறார். சேகர்பாபு தற்போது அத்தொகுதியின் எம்.எல்.ஏ., என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை !
கன்னியாகுமரி மக்களவை 12,636 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் முன்னிலை பெற்றுள்ளார். பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுகவின் தங்கதமிழ்செல்வன் முன்னிலை
போடிநாயக்கனூர் தொகுதியில் 124 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கதமிழ்செல்வன் முன்னிலை பெற்றுள்ளார். துணை முதலமைச்சர் ஒ.பன்னர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜ் தொடர்ந்து பின்னடைவு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காமராஜ் மூன்றாவது சுற்றில் 3317 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிடும் ஜோதிராமன் மூன்றாவது சுற்றில் 3635 வாக்குகளை பெற்றுள்ளார். அமைச்சர் காமராஜ் 1166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் இளங்கோ 3117 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 2517 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்
காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தற்போது வரை கிடைத்த வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் 6076 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செந்தில்பாலாஜி 5598 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
தொண்டமுத்தூர்: அமைச்சர் வேலுமணி 5046 வாக்குகள் முன்னிலை
கோவை மாவட்டம் தொண்டமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் வேலுமணி 9879 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி 4833 வாக்குகள் பெற்று பின்னடை சந்தித்துள்ளார். 5046 தொகுதியில் வேலுமணி முன்னிலையில் உள்ளார்.
தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் 2520 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் 2157 வாக்குகள் பெற்று பின்னடைவு பெற்றுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா 1412 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுகவேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பின்னடைவை சந்தித்துள்ளார்
சாத்தூர் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்; அதிமுக-அமமுக மோதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான வைகைசெல்வன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறைக்கு வந்ததால் அமமுகவினர் கோசம் எழுப்பியதால் அதிமுக - அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் அமமுக முகவர் திருமலைராஜன் சட்டை கிழிக்கப்பட்டது. இதையடுத்து சாத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்படி பழனிச்சாமி 3325 வாக்குகள் முன்னிலையில்
எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை விட 3325 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். அவர் பெற்ற வாக்குகள் 5484.
குமாரபாளையம் தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் அமைச்சர் தங்கமணி 3712 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வெங்கடாசலம் 2204 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்
மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ தபால் வாக்கு எண்ணிக்கையில் 11 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டிடும் திமுக வேட்பாளர் சின்னம்மாள் 24 வாக்குகள் பெற்றுள்ளார். 13வாக்குகள் வித்தியாசத்தில் செல்லூர் ராஜூ பின்தங்கியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக 26 இடங்களிலும், அதிமுக 17 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக முதற்கட்ட நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அமமுக 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் தபால் வாக்கு எண்ணிக்கையில் 34 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1343 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கயல்விழி 864 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை தெரியவந்த முடிவின் படி 479 வாக்குகள் வித்தியாசத்தில் முருகன் முன்னிலை வகிக்கிறார்.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் தற்போது வரை திமுக கூட்டணி 18 இடங்களிலும், அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் அமமுக 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சம்பத், திமுக வேட்பாளரை விட 300 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் தபால் வாக்கில் 600 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக 8 இடங்களிலும் காங்கிரஸ் 1 தொகுதியில் முன்னிலை
தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 9 இடங்களில் முன்னிலை. திமுக 8, காங்கிரஸ் 1 இடங்களில் முன்னிலை. அதிமுக 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் சில இடங்களில் சிக்கல்
தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ள நிலையில், மதுரை, திருச்சி கிழக்கு, ராணிமேரி கல்லூரி, ராணிப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் கடைபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு வழிமுறைகள்
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும். அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரும் போது உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை; வழக்கத்தை விட கூடுதல் நேரம் எடுக்கலாம்
தமிழகம் முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை அந்தந்த மையங்களில் துவங்கியது. கட்சிகளின் முகவர்கள் முன்பாக வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது. இம்முறை முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளதால் வழக்கத்தை விட தபால் வாக்கு எண்ணிக்கை முடிவு தெரிய சிறிது நேரம் எடுக்கலாம்.