தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டதில் இருந்து, தற்போது வரை ரூ.23 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தேர்தல் களத்தில் போட்டியிடும் அரசியல் கட்சியினை சார்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Continues below advertisement

* ஒரு வேட்பாளர் சட்டசபை தேர்தலின்போது அதிகபட்சம் ரூபாய் 40 லட்சம் வரை மட்டுமே தேர்தல் சம்பந்தமான பணிகளுக்காக செலவினம் மேற்கொள்ள இயலும்.

* வேட்பாளரின் தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்காக, பல்வேறு தேர்தல் செலவின கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்திட 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படை / நிலை கண்காணிப்பு குழுக்கள் மட்டுமில்லாமல் 25 துறை சார்ந்த கண்காணிப்பு குழுக்களும் இடம் பெற்றுள்ளன. இதில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை. சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.

* தற்போது 234 தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா 9 பறக்கும் படைகள். 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழகம் முழுவதும் 2160 பறக்கும் படைகள். 2160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

* இக்கண்காணிப்பு குழுக்கள் மூலம் இன்றுவரை (17/03/2026) ரூபாய் 23.28 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நிலையில் உள்ளன.

* பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அனைத்தும் அனைத்து தரப்பினராலும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

* அதன்படி இன்று (17.03.2026) வரை தமிழகம் முழுவதும் 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் நீக்கப்பட்டு 61 இடங்களில் குற்றவியல் நடவடிக்கை தொடர்வதற்காக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* மேலும் தேர்தல் நடத்தை விதிகளின்படி காலம் சென்ற / மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படவேண்டியதில்லை என்றும், தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு பொது இடங்களிலோ, அரசு கட்டிடங்களிலோ வைக்கப்பட்டு இருந்தால் அவைகள் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தவுடன் மறைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள், அரசியல் கட்சியினர். வேட்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் ரொக்கம் எடுத்து செல்லும்பொழுது அவை எப்படி பெறப்பட்டது. எதற்காக எடுத்து செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணங்கள் அல்லது அதற்கான காரணங்களை எழுத்து மூலம் சமர்ப்பித்தால், இத்தொகை வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்து செல்லப்படும் தொகை இல்லை என்று தணிக்கை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். பின்பு அத்தொகை உடனடியாக உரியவரிடம் திரும்ப வழங்கப்படும். பறிமுதல் செய்யப்படமாட்டாது. இதுகுறித்து முறையீடு ஏதும் இருப்பின் மாவட்ட குறைதீர் குழுவிடம் (District Grievance Committee) முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.