Tamil Nadu Election 2026: ஓட்டுப்போட போறீங்களா? வாக்குச்சாவடியில் கோடு போட்ருப்பாங்க - தெரிஞ்சுட்டுப்போங்க
Tamil Nadu Assembly Election 2026: தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், சென்னையில் அதற்கான பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tamil Nadu Assembly Election 2026: ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைந்துள்ளது.
தேர்தல் பணிகள் தீவிரம்:
அரசியல் கட்சிகளின் பரப்புரை முற்றிலும் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவிற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு ஏற்கனவே முழுவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் அதன் பணிகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் மொத்தம் 16 தொகுதிகள் உள்ளது. இந்த 16 தொகுதிகளிலும் 975 இடங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
4 ஆயிரத்து 85 வாக்குச்சாவடிகள்:
இந்த 975 இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 85 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் வாக்காளர்களும் எந்த தடையுமின்றி வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள்:
வாக்காளர்கள் வாக்களிக்கும் இடங்களில் அவர்கள் எந்தவித பதட்டமும் இன்றி வாக்களிப்பதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதி என ஒரு வாக்காளருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
வண்ணக்கோடுகள்:
இதுமட்டுமின்றி, 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் அவர்களுக்கான வாக்குச்சாவடியை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக நீலம், மஞ்சள், சிவப்பு நிற கோடுகளை தரையில் வரைந்துள்ளனர். இதன்மூலம் வாக்காளர்கள் சிரமமின்றி தங்கள் வாக்குச்சாவடியை கண்டறிய முடியும்.
சென்னையைப் பொறுத்தமட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகள் தனியாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவத்தினர், காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நாளை முதல் தேர்தல் நடைபெறும் கல்லூரிகள், பள்ளிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.
பலத்த பாதுகாப்பு:
16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பிறகு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படும். பின்னர், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்



















