தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக வருகை தந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் நடைபெறும் இந்த வாக்குப்பதிவு  அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வெளியூர், வெளிநாடுகளில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் துபாயில் கார் ரேஸிங்கில் இருந்த அஜித் வாக்களிப்பதற்காக நேற்று சென்னை திரும்பினார். 

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் ஆளாக அஜித் வருகை தந்தார். வெள்ளை நிற கோட் அணிந்து வந்த அவருடன் மேலாளர் சுரேஷ் சந்திராவும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் அஜித் சட்டை பாக்கெட்டில் சிவப்பு, கருப்பு நிறம் இடம் பெற்றிருந்தது. இதனால் அவர் யாருக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காலை 6.50 மணிக்கு வருகை தந்த அஜித் திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் வாக்குச்சாவடி முன் குவிந்தனர். அவர்களை போலீசார் கட்டுப்படுத்தி அஜித்தை வாக்களிக்க அழைத்து சென்றனர். 6.55 மணிக்கே அஜித் தனது வாக்கை செலுத்தியதோடு அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.