தஞ்சாவூர்: புதுமைக்கும், உலகை வியக்க வைக்கும் செயலுக்கும் பெயர் பெற்ற தஞ்சாவூரில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் வியப்புடன் வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்த ஆச்சரிய நிகழ்வு நடந்தது.

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 7,27,166 ஆண் வாக்காளர்களும், 7,73,932 பெண் வாக்காளர்கள், 128 மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் என மொத்தமாக 15,01,226 வாக்காளர்கள் உள்ளனர்.





தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதேபோல் திருவையாறு தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளும், ஒரத்தநாடு தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளும், பட்டுக்கோட்டை தொகுதியில் 272 வாக்குச்சாவடிகள், பேராவூரணி தொகுதியில் 260 வாக்குச்சாவடிகளும், மன்னார்குடி தொகுதியில்  285 வாக்குச்சாவடிகளும் என மொத்தமாக 1,710 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 2,050 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,080 கட்டுபாட்டு இயந்திரங்கள், 2,221 ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி உள்பட 3 இடங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 2 ஆயிரத்து 308 வாக்குச் சாவடிகளில் தலா 8 மாதிரி வாக்குச் சாவடிகளும், மகளிர் மட்டுமே நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகளும் இடம்பெற்றன.

மேலும், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, மதுக்கூர் அருகே கண்டியங்காடு, கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூர் ஆகிய இடங்களில் பசுமை வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுத்து, இந்த முறை பசுமை வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டது.





இதில், மாதிரி வாக்குச் சாவடி போன்று நுழைவுவாயிலில் பந்தல் அமைக்கப்பட்டு, வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டன. மேலும், பன்னீர், சந்தனம், குங்குமத்துடன் வரவேற்பாளரும் நியமிக்கப்பட்டனர். இந்த மையத்துக்கு வந்த வாக்காளர்களிடம் எந்த பாகத்துக்கு எப்படிச் செல்ல வேண்டும் என வழியும் கூறி உதவி செய்தனர்.

மேலும், வாக்குச் சாவடி முகப்பில் நெகிழி அட்டையில் எழுதுவதற்கு பதிலாக தென்னங்கீற்றில் பசுமை வாக்குச் சாவடி என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. வாக்குப் பதிவு மறைவிடத்தைச் சுற்றி அட்டையுடன் தென்னங்கீற்று வைத்து மறைக்கப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் கேனுக்கு பதிலாக மண்பானையில் குடிநீர் வசதி செய்யப்பட்டது. மையத்துக்குள் நெகிழிக்கு பதிலாக தென்னை ஓலை பின்னலில் அலங்காரங்கள் செய்யப்பட்டன. வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் பயன்படுத்திய எழுதுகோல் கூட காகித அட்டையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

வாயிலில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கான தொட்டிகளும் தென்னங்கீற்றில் செய்யப்பட்டு வைக்கப்பட்டது. கல்லூரி வாயிலிருந்து வாக்குச் சாவடிக்கு முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை அழைத்துச் செல்ல ஆட்டோவுக்கு பதிலாக பேட்டரி வாகனம் பயன்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான பொருள்கள் நெகிழியைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களால் வைக்கப்பட்டிருந்தது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும் தங்கள் ஓட்டை பதிவு செய்த பின்னர் இந்த பசுமை வாக்குச்சாவடி முன்பு வாக்காளர்கள் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.