அன்புநாதன் குடோனில் ரெய்டு


கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக தேர்தல் களத்தை மிகவும் பரபரப்பாக்கியது கரூர் அன்புநாதன் தோப்பு இல்லத்தில் உள்ள குடோனில் நடைபெற்ற ரெய்டு. அ.தி.மு.க.வின் ஐவரணிக்கு மிகவும் நெருக்கமானவர். நிதி நிறுவனம், கல்வி நிறுவனம் என்று பல தொழில்களின் மூலம் கரூர் வட்டாரத்தின் தவிர்க்கமுடியாத தொழிலதிபராக வலம் வருபவர். அன்புநாதன் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான செந்தில்பாலாஜியின் உறவினர் ஆவார்.


2016-இல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தருணத்தில், கரூர் அய்யம்பாளையத்தில் அமைந்துள்ள இவரது தோப்பு இல்லத்திற்கு மட்டும் சைரனை ஒலித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. மேலும், `இது மத்திய அரசுக்கு சொந்தமானது’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனமும் அந்த குடோனுக்கு வந்து சென்றுள்ளது. அந்த வாகனங்கள் வந்து செல்லும் நேரத்தில் மட்டும் அய்யம்பாளையத்தில் மின் இணைப்பு தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது.




இந்த தகவல் போலீசுக்கு கிடைக்க, அப்போது மாவட்ட எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே தலைமையில் போலீசாரும், பறக்கும் படையினரும் குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை கடத்தி அதனை பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் வலுத்தது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகள் மூன்று நாட்கள் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 12 பணம் எண்ணும் இயந்திரங்கள், பணத்தை கட்டும் ரப்பர் பேண்டுகள், சரக்கு அடைக்கப்படும் காலி பெட்டிகள், நான்கு கார்கள், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.


அன்புநாதனின் குடோனுக்கு கீழே ஒரு ரகசிய அறை இருப்பதாகவும், அந்த அறையிலே கோடிக்கணக்கான பணம் பதுக்கப்பட்டு, அங்கிருந்தே பணம் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என்றும் சில ரகசிய தகவல்களும் போலீசுக்கு கிடைத்துள்ளது. மேலும், அந்த தோப்பில் ஏகப்பட்ட கிணறுகள் இருப்பதாகவும், அந்த கிணறுகளில் பாலீதீன் கவரால் தண்ணீர் உள்ளே புகாதாவாறு பணங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அளிக்கப்பட்டன. அந்த குடோனைச் சுற்றிலும், குடோனிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.


இத்தனை பரபரப்பான தகவல்கள் தொடர்ந்து வெளியானதால் நிச்சயம் பெரியளவிலான தொகை கைப்பற்றப்பட்டிருக்கும் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மூன்று நாட்கள் சோதனையில் ரூ.10.3 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்த தொகைக்காக மூன்று நாட்கள் தொடர் சோதனை? என்று பலத்த சந்தேகங்கள் எழுந்தது. மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த சோதனை இறுதியில் `சப்’பென்று ஆக்கப்பட்டதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர்.


தள்ளிவைக்கப்பட்ட தேர்தல்


2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்று ஆட்சி செய்த சில மாதங்களிலே மரணித்தார். இதையடுத்து, ஓ.பி.எஸ். முதல்வராக பொறுப்பேற்றது, பின்னர் ராஜினாமா செய்தது, சசிகலாவை எதிர்த்தது, அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது, சசிகலா சிறைக்கு சென்றது என தமிழக அரசியல் களத்தையே ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருந்த தருணம் அது.


இந்த நேரத்தில், 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க. இந்த முறை அ.தி.மு.க. அம்மா( சசிகலா அணி) அ.தி.மு.க. புரட்சித்தலைவி அணி( ஓ.பன்னீர்செல்வம் அணி) என்று இரண்டு அணியாக போட்டியிட்டது.




அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தினகரனும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். தமிழகத்தை ஆளும் கட்சி முதன்முறையாக தன்னுடைய இரட்டை இலை சின்னம் இல்லாமல் களமிறங்கியது. தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது. இவர்கள் தவிர தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் பாடகர் கங்கை அமரன், தே.மு.தி.க. சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் சார்பில் லோகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால், தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா கட்டுக்கடங்காமல் நடைபெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்பட பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், தினகரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக ரூ.89 கோடி வரை செலவிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.


இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குச்சென்ற இந்த குற்றச்சாட்டுகளால், அப்போதைய தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது. அவரது அறிக்கை மற்றும் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. பின்னர், இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்த பிறகு, சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மதுசூதனனுக்கு மட்டுமே டெபாசிட் கிடைத்தது. தி.மு.க. டெபாசிட்டை இழந்து தோல்வி அடைந்தது.


570 கோடி ரூபாய் கண்டெய்னர் கண்டுபிடிப்பு


2016 சட்டசபை தேர்தலின் ஹைலைட் நிகழ்வே ரூபாய் 570 கோடி கைப்பற்றப்பட்டதுதான். திருப்பூரில் நள்ளிரவில் பறக்கும் படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய சோதனையில் மூன்று கண்டெய்னர் லாரிகளை மடக்கிப்பிடித்தனர். அந்த லாரிகளை சோதனையிட்ட அதிகாரிகள், கண்டெய்னர் முழுவதும் கோடிக்கணக்கான பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மூன்று கண்டெய்னர்கள் முழுவதும் மொத்தமாக ரூபாய் 570 கோடி ரொக்கம் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பணம் யாருடையது என்று விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தநிலையில், திடீரென ரூபாய் 570 கோடியும் எஸ்.பி.ஐ.க்கு சொந்தமானது என்றும், ஆந்திராவில் உள்ள கரன்சி மையத்திற்கு கோவையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.




ஆனால், இந்த விளக்கத்தை ஏற்காத தி.மு.க., இவ்வளவு பெரும் தொகையை கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி வாய்மொழி உத்தரவு வழங்காது. இது சந்தேகத்திற்குரியது என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தது நீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இன்றளவும் இந்த தொகை அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட பணம் என்ற குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.


டெபாசிட் இழந்த தி.மு.க.


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்து, பின்னர் மீண்டுமு் இணைந்தது. கருணாநிதியும் வயது முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததால், மு.க.ஸ்டாலின் மீதும். தி.மு.க. மீதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. அந்த நேரத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே ரத்து செய்யப்பட்டபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருதுகணேஷே தி.மு.க.வின் வேட்பாளராக இந்த முறையும் களமிறக்கப்பட்டார்.




தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., வி.சி.க., என முன்னணி கட்சிகள் அனைத்தும்  இருந்தன. அப்போது செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினும் தொகுதி முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும் என்று விமர்சகர்களும், அரசியல் வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால், கள நிலவரம் தி.மு.க. தொண்டர்களுக்கு பலத்த அதிர்ச்சியை அளித்தது. குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தமிழக சட்டசபைக்கு நீண்ட காலத்துக்கு பிறகு, ஒரு சுயேட்சை வேட்பாளர் உறுப்பினராக சென்றார்.




அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 48 ஆயிரத்து 306 வாக்குகள் பெற்றார். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் வெறும் 24 ஆயிரத்து 581 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், தி.மு.க. டெபாசிட்டை இழந்து படுதோல்வியடைந்தது. இதே தொகுதியில் 2016-ஆம் ஆண்டு போட்டியிட்ட ஜெயலலிதா, அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை விட 39 ஆயிரத்து 544 வாக்குகளே கூடுதலாக பெற்றிருந்தார். ஆனால், சுயேட்சை வேட்பாளர், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை விட 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜெயலலிதாவை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.


20 ரூபாய் டோக்கன்:




ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் அமோக வெற்றிபெற்ற பிறகு, விஸ்வரூபம் எடுத்தது 20 ரூபாய் டோக்கன் விவகாரம்.  இந்த இடைத்தேர்தலில் தனக்கு வாக்களித்தால், வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்கள் அனைவருக்கும் ரூபாய் 10 ஆயிரம் அளிப்பதாகவும், அதற்காக 20 ரூபாய் டோக்கனாக அளிக்கப்பட்டதாகவும் தினகரன் மீது அத்தொகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அத்தொகுதியில் தினகரன் தண்ணீர் பந்தல் ஒன்றை திறந்து வைக்க சென்றபோது அவரை 20 ரூபாய் நோட்டுடன் அத்தொகுதி மக்கள் முற்றுகையிட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த 20 ரூபாய் டோக்கன் காரணமாகவே தினகரன் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிடாமல், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.