தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தொகுதிகளுக்காக அடித்துக் கொள்ளுவதாகவும் முட்டாள்தனமாக நடந்துகொள்வதாகவும் காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறும்போது, விற்பனை அணுகுமுறையோடுதான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கடுமையாகச் சாடி இருந்தார்.
முட்டாள்தனம்
இதைக் குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரவீன் சக்கரவர்த்தி, தற்போதைய நிலை முட்டாள்தனமாகவும் அடிதடியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்த அளவிலான பீட்ஸா என்பதால், உறுப்பினர்கள் அடித்துக் கொள்வதையும் பெரிய சைஸ் பீட்ஸா என்றால் எல்லோரும் தாராளமாகச் சாப்பிடலாம் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார். இது அதிக தொகுதிகளைப் பெற்று இருந்தால், சர்ச்சையின்றி தொகுதிகளைப் பிரித்துக் கொண்டிருக்கலாம் என்று பொருள்படும் வகையில் அமைந்துள்ளது. இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸும் கோஷ்டி பூசலும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது என்று எல்லோரும் விமர்சித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. இதனால் திமுக தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.
