ரேஷன் அட்டைதாரரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவதற்கான கோப்பில் கையெழுதிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ராஜ்பவனில் இன்று எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஸ்டாலினை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதன்பிறகு அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் தேநீர் விருந்து கொடுத்தார். இதையடுத்து, அனைவரும் ஆளுநருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து, பதவியேற்றுக் கொண்ட பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கண்கலங்கிய ஸ்டாலினை அவரது சகோதரி செல்வி ஆறுதல் படுத்தினார்.
இதையடுத்து, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தலைமைச்செயலகத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அரசு பணிகளை தொடங்கினார். 5 கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து இட்டார்.
முதல்வர் ஸ்டாலினின் முதல் கையெழுத்தாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்குவதற்கான கையெழுத்தை போட்டார். இதில், ரூ.2 ஆயிரம் வீதம் முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் ஐந்து கையெழுத்துகள்:
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் வழங்கப்படும்.
- நகர சாதாரண பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவசமாக பயணிக்க ஆணை.
- ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு.
- தனியாரில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும்.
- புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை உருவாக்கி உத்தரவு.
நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணிக்கலாம். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இது வரும் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தால் அதன் கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
இதன்மூலம், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை முதல்நாளில் நிறைவேற்றி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்