TN Chief Secretary: போடு… தமிழக தலைமைச் செயலாளரையே மாற்றிய தேர்தல் ஆணையம்; யார் புதிய செயலர்?
TN Chief Secretary Transfer: தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்படுவதாகவும் புதிய தலைமைச் செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. சாய்குமார் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
யார் இந்த சாய் குமார்?
புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள சாய் குமார் ஐஏஎஸ், 1990ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரும் மாற்றம்
அதேபோல தமிழக ஆயுதக் காவல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1995ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
மாற்றப்பட்ட அதிகாரிகள் உடனடியாகப் பதவியை ஏற்றுக்கொண்டு, இன்று (ஏப்ரல் 8) மாலை 6 மணிக்குள் பொறுப்பேற்ற விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா த்ரிபாதி அனுப்பி உள்ளார்.
தேர்தல் பணிகளுக்கு நோ!
மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் யாரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு காவல்துறை இயக்குநராக (டிஜிபி) இருந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது தலைமைச் செயலாளரே மாற்றப்பட்டு உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 2026 நிலவரப்படி, முதல்முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். எஸ்ஐஆர் சீரமைப்பு பணிகளுக்குப் பிறகு மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 75,032 வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில், தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநிலத்தின் நிர்வாகம் இருப்பது நினைவு கூரத்தக்கது.





















