தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. இந்த தேர்தல் முடிவுகளுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Continues below advertisement

தமிழ்நாட்டின் கடந்த கால தேர்தல்கள் எப்படி நடந்தது? எத்தனை கட்டங்களாக நடந்தது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1967 சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் இருந்த 206 தொகுதிகள் 234 தொகுதிகளாக மாற்றப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தல் 1967 சட்டமன்ற தேர்தல். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு 3 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டம் 1967ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும், 2வது கட்டம் பிப்ரவரி 18ம் தேதியும், 3வது மற்றும் இறுதிகட்டம் பிப்ரவரி 21ம் தேதியும் நடந்தது. அந்த தேர்தலில் திருமங்கலம் வேட்பாளர் உயிரிழந்த காரணத்தால் 233 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடந்தது.  பிப்ரவரி 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. திருமங்கலம் தொகுதிக்கு மட்டும் ஏப்ரல் 29ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

Continues below advertisement

1971 சட்டமன்ற தேர்தல்:

1971ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. 1971ம் ஆண்டு மார்ச் 1, மார்ச் 3 மற்றும் மார்ச் 7ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடந்தது. அந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. 

1977ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:

எம்ஜிஆர் முதன்முறையாக அதிமுக-வைத் தொடங்கிய பிறகு நடைபெற்ற தேர்தல் இது. இந்த தேர்தலில்தான் தமிழ்நாட்டில் முதன்முறையாக 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளான ஜுன் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  தேர்தல் முடிவுகள் ஜுன் 14ம் தேதி நடந்தது. எம்ஜிஆர் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1980 சட்டமன்ற தேர்தல்:

1980ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்றது. 114 தொகுதிகளுக்கு மே 28ம் தேதியும், எஞ்சிய 120 தொகுதிகளுக்கு மே 31ம் தேதியும் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜுன் 1ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் எம்ஜிஆரின் அதிமுக-வே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதாக முடிவுகள் வெளியானது.

1984 சட்டமன்ற தேர்தல்:

தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும். எம்ஜிஆர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தருணத்தில் நடந்த இந்த தேர்தலில் எழும்பூர் மற்றும் பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர்கள் உயிரிழந்த காரணத்தால் 232 தொகுதிகளுக்கு மட்டுமே சட்டமன்ற தேர்தல் நடந்தது. அந்தாண்டு டிசமபர் 24ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. எஞ்சிய 2 தொகுதிகளுக்கு ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடந்தது. 

1989 சட்டமன்ற தேர்தல்:

1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்றது. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது திமுக.  இந்த தேர்தலில் 232 தொகுதிகளுக்கு ஜனவரி 21ம் தேதி தேர்தல் நடந்தது. மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி  தொகுதியில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக மார்ச் 11ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 

1991 சட்டமன்ற தேர்தல்:

1991ம் ஆண்டு மே 26ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடத்த தயாராக இருந்த நிலையில், ராஜீவ்காந்தி மே 21ம் தேதி உயிரிழந்ததால் ஜுன் 15ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.

1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் வாக்குச்சீட்டில் வாக்களிக்கும் முறை 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் நிறைவுக்கு வந்தது. 150 தொகுதிகளுக்கு ஏப்ரல் 27ம் தேதியும், 83 தொகுதிகளுக்கு மே 2ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.  மே 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 1033 வேட்பாளர்கள் போட்டியிட்டம மொடக்குறிச்சியில் ஜுன் 1ம் தேதி தேர்தல் நடந்தது.

2001 சட்டமன்ற தேர்தல்:

தமிழ்நாட்டில் முதன்முறையாக வாக்கு இயந்திரம் மூலமாக நடந்த தேர்தல் இதுவே ஆகும்.  234 தொகுதிகளிலும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலின் முடிவுகள் மே 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

2006 சட்டமன்ற தேர்தல்:

2006ம் ஆண்டு தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்தாண்டு மே 8ம் தேதி நடந்த தேர்தலின் முடிவுகள் மே 11ம் தேதி அறிவிக்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்தது.

2011 சட்டமன்ற தேர்தல்:

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 13ம்  தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் முடிவுகள் ஒரு மாத காலத்திற்கு பிறகு மே 13ம் தேதி வெளியானது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தது. இந்த தேர்தலில்தான் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

2016 சட்டமன்ற தேர்தல்:

2016 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர எஞ்சிய 232 தொகுதிகளில் மே 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. அந்த 2 தொகுதிகளில் மட்டும் ஏராளமான பணப்பட்டுவாடா புகார் காரணமாக நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடந்தது. 

2021 சட்டமன்ற தேர்தல்:

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடந்த முதல் தேர்தலான இந்த தேர்தல் 2021 ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. 26 நாட்களுக்கு பிறகு மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது.  இந்த தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது. 

தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்று, நாளை மறுநாள் முடிவுகள் வெளியாக உள்ளது. 

Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!