தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் மற்றும் காலக்கெடு
தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நாளான 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். மனுக்களைத் தாக்கல் செய்ய விரும்புவோர் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம். வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.
தொடர் விடுமுறைகளால் 4 நாட்கள் மனுத் தாக்கல் கிடையாது
மாற்றுச்சீட்டுச் சட்டம் 1881-ன் கீழ் தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி:
- மார்ச் 31 (செவ்வாய்)
- ஏப்ரல் 01 (புதன்)
- ஏப்ரல் 03 (வெள்ளி)
- ஏப்ரல் 05 (ஞாயிறு)
இந்த நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால், அன்று மனுத் தாக்கல் செய்ய இயலாது.
குறிப்பு: விடுமுறை நாட்களைத் தவிர்த்து இடைப்பட்ட வேலைநாட்களிலும், இறுதி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதியும் மட்டுமே வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால், அரசியல் கட்சியினரும் சுயேச்சை வேட்பாளர்களும் திட்டமிட்டுச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொகுதி பங்கீடு:
தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பணிகள், சூடு பறக்க நடந்து வருகின்றன. இதற்கிடையே திமுக, அதிமுக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக தரப்பில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.
இதற்கிடையில் அதிமுக முதன்முதலாக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் பாஜக போட்டியிடும் நிலையில், அங்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே 234 தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை அதிமுக வெளியிட்டுள்ளது.
