கரூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை வெற்றி பெறுகிறது என்று அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரச்சார வாகனத்தில் வாக்கு சேகரித்தபோது பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கரூர் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் அனல் பறக்க பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து நாள்தோறும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர், திருமலை நகர், ஆத்தூர் புதூர், அருள்நகர் குட்டக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வாகனத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: மனிதர்களை அடைத்து வைக்கும் பட்டிகளை வைக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியதை அடுத்து புதிய டெக்னிக்கை திமுகவினர் கையாண்டு வருகின்றனர். நாங்கள் பிரச்சாரத்திற்கு வந்தால் முன்பே பொதுமக்களை அழைத்துக் கொண்டு மந்தையில் அமர வைத்துள்ளனர். இப்போதே இவ்வளவு மிரட்டுகிறார்களே ஆட்சிக்கு வந்தால் என்ன நிலை என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கரூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை வெற்றி பெறுகிறது இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் வருகிறது எடப்பாடி யார் முதல்வராகிறார். இன்னும் திமுக கூட்டணியில் இழுபறி தீரவில்லை நேற்று கூட ஒருவர் விலகி நம்முடன் இணைந்துள்ளார் எனக்கூறினார்.
