12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகளுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 7 லட்சத்து 91 ஆயிரத்து 651 பேர் எழுதினார்கள். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர்கள் 4,18,724 பேரும், மாணவர்கள் 3,72,930 பேரும் அடங்குவர். மாணவர்களை விட மாணவியர்கள் 3.81% அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
கடந்த ஆடை விட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 0.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 489க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 16,024 ஆக உள்ளது. அதேபோல் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது.
2026ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 8,855 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் எழுதிய நிலையில் அதில் 6,811 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 250 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில் அதில் 238 பேர் தேர்ச்சி கண்டுள்ளனர். தனித்தேர்வர்கள் 25,521 பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதிய நிலையில் 6,171 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய வலைத்தளங்கள் மூலம் இந்த தேர்தல் முடிவுகளை நாம் அறிய முடியும். மேலும் DigiLocker தளத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதேசமயம் வாட்ஸ்அப் மூலம் 845252525 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு மெசெஜ் மூலம் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த முறை 12ம் வகுப்பு தேர்வில் 37,960 பேர் தோல்வியடைந்துள்ளனர். இந்த தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 29ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜூலை 7ம் தேதிக்குள் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆன்லைன் வழியாக சமர்பிக்க வேண்டும் எனவும், அதற்கான கால அவகாசம் மே 18ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
