புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும் 54 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும்,7 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர்.இதில் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து தாம்பரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி கமலக்கண்ணன் மேயர் பதவிக்கும், துணை மேயர் வேட்பாளராக காமராஜ் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.


 




இதைத்தொடர்ந்து இன்று காலை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய மேயராக பதவியேற்க பட்டியல் இனத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி தனது தந்தை கமலக்கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். மாநகராட்சி ஆணையரிடம் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாக அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை 49-வது வார்டு உறுப்பினர் டி.காமராஜன் முன்மொழிந்தார்.


62-வது வார்டு உறுப்பினர் இந்திரன் வழிமொழிந்தார். மேயர் போட்டியில் வேறு யாரும் இல்லாத நிலையில் போட்டியின்றி வசந்தகுமாரி தாம்பரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மேயருக்கான அங்கி அணிவிக்கப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.



இதைத் தொடர்ந்து ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் வசந்தகுமாரி மேயருக்கான பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு மேயர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணி அளவில் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் காமராஜ் போட்டியின்றி தேர்வு ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேயராக பொறுப்பேற்றுள்ள வசந்தகுமாரி பி.டெக் கெமிக்கல் இன்ஜினியர். தாம்பரம்  1வது வார்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இவரது தந்தை கமலக்கண்ணன் தாம்பரம் பழைய 1வது வட்ட செயலாளர், இவர் 42 ஆண்டுகளாக திமுகவில் உள்ளார்.  வசந்தகுமாரியின் கணவர் கோகுல் செல்வன் லேப் டெக்னீஷியனாக ஆக உள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசந்தகுமாரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டு தற்போது ஆகியுள்ளார். துணை மேயராக வெற்றி பெற்றுள்ள  ஜெகத்ரட்சகன் எம்.பியின் மைத்துனர் ஜி.காமராஜ் (60) அறிவிக்கப்பட்டுள்ளார். காமராஜ், கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2001- 2006ம் ஆண்டு வரை, திருநீர்மலை பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலராக பணியாற்றியவர். இவரது மனைவி கலைவாணி, காஞ்சி வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்து வருகிறார். இவர் 2011 - 2016ம் ஆண்டு வரை திருநீர்மலை பேரூராட்சி தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.