மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜஹார் தெரிவித்துள்ளார். 


பஞ்சாபில் தனித்துப் போட்டி:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏபரல்-19 ம் தேதி தொடங்கி ஜூன்,1 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறிதிகள் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பா.ஜ.க. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது எதிர்பாத்தப்படி அமையாததால் பா.ஜ.க. தனித்து  போட்டியிடுவதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் சுனில் ஜஹார் தெரிவித்துள்ளார்.






மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும், கூட்டணிக்கான சாத்தியக் கூட்றுகள் இல்லை என்பதால் ஒடிசாவிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இப்போது பஞ்சாப் மாநிலத்திலும் பா.ஜ.க. கூட்டணியின்றி தேர்தலை சந்திக்கிறது. 


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிக்கு ஒரே கட்டமாக ஜூன் -1 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவத் மான் முதலமைச்சராக உள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் I.N.D.I.A. கூட்டணியில் இருந்தாலும் பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பஞ்சாபை பொறுத்தவரை சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது. சிரோமணி, பா.ஜ.க. இரண்டு கட்சிளும் 1996- 2000 வரை கூட்டணியில் இருந்தன. வேளாண் சட்டத் திருத்தம் நிறைவேறியபோது, அதில் முரண் ஏற்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது. வேளாண் சட்டம் திரும்ப பெற்றதால் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொண்டது. இருந்தாலும், முயற்சி தோல்வியடைந்ததால் இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகிறார்கள்.


இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம்  ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.