நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மாதம் 28 ம் தேதி துவங்கியது. கோவையில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அறவிப்பு தாமதமானதால், வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் கட்சிகளிடையே சுணக்கம் நிலவியது. இந்நிலையில் அதிமுக, பா.ஜ.க.வில் பெரும்பாலான வார்டுகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதாலும், திமுகவில் முதல் கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாலும் இன்று வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்படைந்தது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 20 மையங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 93 வார்டுகளுக்கான வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது. இதில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 38 வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் மனைவி சர்மிளா அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற சர்மிளா, அதிமுக சார்பில் மேயர் பதவிக்கு முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வேட்பு மனுத் தாக்கலின் போது சர்மிளாவுடன் அவரது கணவர் சந்திரசேகரும், கட்சி நிர்வாகி ஒருவரும் உடன் சென்றனர். திமுக உட்பட பிறகட்சி வேட்பாளர்களுடன் ஒருவரை மட்டும் அனுமதித்துவிட்டு சர்மிளாவுடன் மட்டும் இருவரை அனுமதித்தற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகர், ”கோவை மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை. அதிக வாக்கு வித்தியாசத்தில் இந்த வார்டில் வெற்றி பெறுவேன். வார்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன். பெண்களை மனதில் வைத்து நிறைய சமூக பணிகளை அறக்கட்டளை மூலம் செய்துள்ளேன். மேயர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என அவர் தெரிவித்தார்.
இதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன. சிலர் வித்தியாசமான முறைகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 32வது வார்டில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட உள்ள மகேஷ்வரன், சிவானந்த காலனி பகுதியில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த அவர் குதிரையில் வந்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதை சுட்டிக் காட்டும் விதமாக குதிரையில் வந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் தான் வெற்றி பெற்றால் குதிரையை போல வேகமாக தனது வார்டு மக்களுக்காக உழைப்பேன் எனவும் தெரிவித்தார். இது அங்கிருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்தது.