தமிழக அரசியல் வரலாற்றில் முக்குலத்தோர் முதல்வர் என்ற ஒரு பெருமை, ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நபர் என்ற பல பிளஸ் பாயிண்ட்களும் ஓபிஎஸ்க்கு தோளில் மாலையாய் கிடப்பது, வெற்றி வாய்ப்புக்கு உதவும் என நம்பப்படுகிறது.


திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக தற்போது எம்பியாக உள்ள நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.


இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ராமநாதபுரம் உள்ளிட்ட 21 தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார். அதில் ராமநாதபுரம் தொகுதிக்கு விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பா.ஜெய பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கெல்லாம் ஹைலைட்டாக ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவார் என தொடர்ந்து செய்திகள் வந்த நிலையில், அதிரடியாக ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் தாமே நேரடியாக களத்தில் இறங்கப் போவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தது முதல் ராமநாதபுரம் தொகுதி விஐபி தொகுதியாகவும் ஸ்டார் தொகுதியாகவும் ஆகிவிட்டது.




 'தேனி வேண்டாம்' 'ராமநாதபுரந்தான் வேணும்'


முக்குலத்தோர் வாக்குகளை குறி வைத்து தொடக்கம் முதலே ஓபிஎஸ் வேலை பார்த்து வந்திருந்தார். ஏற்கெனவே அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் முக்குலத்தோர் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இவை அனைத்தும் தனக்கு கைகொடுக்கும் என்று அவர் கருதிதான் ராமநாதபுரத்தில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


ஒரு காலத்தில் முக்குலத்தோர் பெரும்பகுதியினர் திமுகவிலும் அதன் பின்னர் அதிமுகவிலும் அணி திரண்டார்கள். சசிகலா, நடராஜனுக்காக ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயமும் ஜெயலலிதா பின்னாடி அணி திரண்டது. பின்னர் டிடிவி, ஓபிஎஸ் வசம் சென்றது. தற்போது இந்த வாக்கு வங்கிதான் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு என ஓ.பன்னீர்செல்வம் கருதியுள்ளார். எனவேதான் தனது சொந்த ஊரான தேனியை தவிர்த்துவிட்டு ராமநாதபுரத்தில் களமிறங்கியுள்ளார்.




அதே நேரத்தில், அவருக்கு கிடைக்கும் சின்னத்தை பொருத்தும் வெற்றி வாய்ப்பு அமையும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜெய பெருமாளும் இதே முக்குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், இரட்டை இலை சின்னத்தாலும் வாக்குகள் பிரியும் நிலையும் ஏற்படக் கூடும். பல தரப்பட்ட பலவீனங்களுக்கு மத்தியில் தன்னுடைய பலத்தை நிருபிக்க, தன்னால் ராஜ்ய சபா எம்.பி பதவி வாங்கி தரப்பட்ட உள்ளூர்காரர் தர்மரையும், தாமரைச்சொந்தங்களும் கைகொடுப்பார்களா என போகப்போகத்தான் தெரியும். ஆம் மாவட்டத்தில் நடந்த தேர்தலை காட்டிலும் தற்போது பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. அதே வேளையில், தங்கள் கூட்டணிக்கு பாஜகவினரும் முழுமூச்சாக கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.


அவருக்கு பலம் என்று சொன்னால், திமுக கூட்டணியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரான நவாஸ் கனி மீது கூட்டணி கட்சி திமுகவினரே அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 'ஜெயபெருமாள்' வெளியூர் இறக்குமதி வேட்பாளர் என சொந்தக் கட்சியினரே முனுமுனுக்கினர். இதற்கிடையே தனது செல்வாக்கு, சமுதாயத்தினரின் ஆதரவு, தமிழக அரசியல் வரலாற்றில் முக்குலத்தோர் முதல்வர் என்ற ஒரு பெருமை, ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நபர் என்ற பல பிளஸ் பாயிண்ட்களும் ஓபிஎஸ்க்கு தோளில் மாலையாய் கிடப்பது, வெற்றி வாய்ப்புக்கு உதவும் என நம்பப்படுகிறது.