தமிழகத்தில் பாமக வளர்ச்சி

தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக பாமக இருந்து வந்தது.  வட மாவட்டங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் பாமகவின் உதவி கட்டாயம் தேவையாக இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக தேர்தல் நேரத்தில் பாமக எடுத்த ஒரு சில முடிவுகளால் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கையில், பாமகவில் தந்தை - மகன் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. யாருக்கு பாமக சொந்தம் என்ற மோதலால் இரு பிரிவாக பாமக பிரிந்தது. ஒரு கட்டத்தில் பாமகவில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கி உத்தரவிட்டார். 

Continues below advertisement

உட்கட்சி மோதலால் பாமக நிர்வாகிகள் தவிப்பு

ஆனால் தன்னை கட்சியில் இருந்து நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லையெனவும், பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளதாகவும் அன்புமணி தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற சட்ட போராடங்களில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் பாமகவின் மாம்பழம் சின்னத்தில் ராமதாஸ் தரப்பு போட்டியிட முடியாத நிலையானது ஏற்பட்டது. இந்த நிலையில் திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலை உருவானது. அடுத்தாக ராமதாஸை திமுக கூட்டணியில் இணைக்க திருமாவளவனும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி

இதனால் கூட்டணி தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காமல் ராமதாஸ் தவித்து வந்தார். இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தனது தலைமையில் கூட்டணியை உருவாக்கவும் காய் நகர்த்தி வந்தார். அந்த வகையில் பாமக நிறுவனரான ராமதாஸை சசிகலா சந்தித்து பேசியிருந்தார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் சசிகலாவுடன் கூட்டணி அமைப்பது உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சசிகலாவுடன் கூட்டணி வைப்பதை ராமதாஸ் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ராமதாசிடம் இருந்து விலக அருள் முடிவு

அந்த வகையில் ராமதாசுக்கு வலதுகரமாக இருந்து அன்புமணிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தவர் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், இந்த நிலையில் சசிகலாவுடன் கூட்டணி வைப்பதை அருள் விரும்பவில்லையென கூறப்படுகிறது. எனவே ராமதாஸ் அதரவாளராக இருக்கும் அருள் அங்கிருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், அடுத்தாக அதிமுக அல்லது திமுகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தேர்தல் நெருங்க நெருங்க அரசியலில் பல்வேறு மாற்றங்கள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.