2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் - சசிகலா கூட்டணி அமைத்துள்ள நிலையில் இருவரும் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்

வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை திமுக, நாம் தமிழர் கட்சி, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றோடு டாக்டர் ராமதாஸின் பாமக மற்றும் சசிகலா தொடங்கிய  அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இருவரும் அமைத்துள்ள கூட்டணியும் போட்டியிடுகிறது. 5 முனை போட்டி நிலவுகிறது என்பதால் தமிழக அரசியல் களம் எதிர்பார்ப்பு மிகுந்த ஒன்றாக அமைந்துள்ளது. 

இந்த தேர்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதன் காரணமாக சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் யாருக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்ற குழப்பம் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் மாம்பழம் சின்னம் யாரேனும் ஒருவருக்கு வழங்கப்படுமா அல்லது முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும் அவர் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. 

ஒரே கூட்டணியில் இரு வேட்பாளர்கள்

இந்த நிலையில்  அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார். அதன்படி சங்கரன் கோவில், மதுரை மத்தி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், மேலூர், மானாமதுரை, பரமக்குடி, ராஜபாளையம், முதுகுளத்தூர், தென்காசி, சிவகங்கை, குளச்சல், சிவகாசி, திண்டுக்கல், மயிலாடுதுறை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம்,  திட்டக்குடி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு சசிகலா வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

இதில் மயிலாடுதுறை தொகுதியில் நா.சுதாகர் என்பவர் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள பசும்பொன் மக்கள் தேசம் கட்சிக்கு சாத்தூர், ஆலங்குளம் தொகுதிகளும், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிறுவனர் நன்னிலம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் டாக்டர் ராமதாஸூம்  முதற்கட்டமாக 5 தொகுதிகான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி சேலம் மேற்கு, வந்தவாசி, கும்பகோணம், விருத்தாச்சலம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதில் மயிலாடுதுறைக்கு சக்திவேல் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணி வைத்துக் கொண்டு மயிலாடுதுறை தொகுதிக்கு இருவரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அவர்கள்து ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை போல கூட்டணியில் இருந்து ஆரோக்கியமான மோதலுக்கு சசிகலா - டாக்டர் ராமதாஸ் இருவரும் தயாராகி விட்டதாக பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.