சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரத்தின்போது அனைத்து கட்சிகளுக்கும் பொதுமக்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். வரவேற்பு ஆதரவாக மாறி ஓட்டாக மாறுமா என்று வாக்கு எண்ணிக்கை நாள் அன்றுதான் தெரியவரும். மேலும், ஸ்டார் நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகள் எந்த கட்சிக்கும் போகும் என்று பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக இந்தத் தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் அவருக்கு எந்த நடிகரின் ரசிகர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரியவில்லை.
இந்த நிலையில், சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், சேலம் ரஜினி ரசிகர் மன்றத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள், எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனகராஜ், “சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். தலைமையிடம் அனுமதி பெற்று நாங்கள் இங்கு வந்துள்ளோம். தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தால்தான் இந்த நிலை மாறும். தனிப்பட்ட முறையில் ஆதரவு தெரிவிப்பதற்காக, தலைவருக்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற்று வந்துள்ளோம்" என்று கூறினார்.
