ராஜஸ்தான் மாநித்தின் சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று அதாவது நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் தொடங்கி பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொதுத் தேர்தலில் காலை முதல் மிகவும் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தனர். 


வாக்குப்பதிவு:


இங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த தேர்தலில் கட்சிகள் வாக்குகளை அள்ள பல்வேறு தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டனர். 


இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய வாக்குப் பதிவு தற்போது சற்று மந்தமாகியுள்ளது. மாலை 5 மணி நிலவரத்தின்படி 68.50% வாக்கு பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 3 மணி நிலவரத்தின்போதே மொத்த வாக்குப்பதிவானது 55 சதவீதம் மட்டும் இருந்ததால், மக்களுக்கு வாக்கு செலுத்த ஆர்வம் இல்லையா? அல்லது விழிப்புணர்வு இல்லையா? என்ற கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது. 


ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் பரபரப்பிற்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில், மிசோரம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு இன்று  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 


 மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வரும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், எம்எல்ஏவுமான குர்மீத் சிங் கூனார் மரணமடைந்ததால், இந்தத் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா ஏற்கனவே அறிவித்திருந்தார்.