Rahul Gandhi: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது என, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


ராகுல் காந்தி பேச்சு:


டெல்லி ஜவஹர் பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, ”சுதந்திரமடைந்த 70 ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான படியாகும். இப்போது நாட்டின் நிலைமை என்ன, நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சி இதை செயல்படுத்தும்.  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல, இது எனது வாழ்க்கையின் நோக்கம்.  அதை விட்டுவிடமாட்டேன். தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பயப்படுகின்றனர்.  எந்த சக்தியாலும் சாதி வாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் அரசு வந்தவுடன் நாங்கள் முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள். இது எனது  வாக்குறுதி. 






சொத்து மறுஒதுக்கீடு பற்றி ராகுல் காந்தி:


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா?  பிரதமர் மோடி பீதியடைந்து இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. சொத்து மறுஒதுக்கீடு விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுப்பதாக நான் கூறவில்லை. எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிப்போம் என்று தான் கூறுகிறேன். எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை சோதிப்போம் என்று நான் சொன்ன தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடி எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பாருங்கள். இது நாட்டை உடைக்கும் முயற்சி என்று சொல்கிறார்கள். சொத்து கணக்கெடுப்பு மூலம் நாம் பிரச்னைகளை தெரிந்துகொள்வோம். 90 சதவீத இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதியை தடுக்க நான் அழைப்பு விடுத்த தருணத்தில், பிரதமரும் பாஜகவும் என் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளனர். ஒரு தலித் அல்லது பழங்குடியினர் கூட ராமர்  கோயில் அல்லது புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது பங்கேற்கவில்லை. தொண்ணூறு சதவீத மக்கள் இதை புரிந்து கொண்டுள்ளனர்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.


தீவிரமடையும் ராகுல் - மோடி கருத்து மோதல்:


கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, சாதி வாரி கணக்கெடுப்புடன் சொத்து மற்றும் நிறுவன கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி அறிவித்தார். அதனடிப்படையில் சொத்து மறுபகிர்வு நடத்தப்படும் எனவும் உறுதியளித்தார். அதேநேரம், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்கள் உழைத்து சம்பாதித்த சொத்துகளை பறித்து, ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கும் கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தான் தற்போது பாஜக மற்றும் கங்கிரஸ் இடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது.