புதுச்சேரி : அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) நிறுவனரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி இன்று தனது அரசியல் கோட்டையான தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. ஒருபுறம் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வர, மறுபுறம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்குள் நிலவும் மோதல்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் காரணியாக உருவெடுத்துள்ளன.

முதலமைச்சரின் அதிரடி:

இரு தொகுதிகளில் போட்டிஅகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் (AINRC) நிறுவனரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி இன்று தனது அரசியல் கோட்டையான தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் மங்கலம் தொகுதியிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய உள்ளார். மார்ச் 23-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறையடைய உள்ள நிலையில், ரங்கசாமியின் இந்த நகர்வு அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்.டி.ஏ கூட்டணியில் விரிசல்?

ரங்கசாமியின் மௌனப் போராட்டம் வெளியே கூட்டணி என்று தெரிந்தாலும், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணியில் பெரும் புகைச்சல் நிலவுகிறது. இதற்கு முக்கியக் காரணங்களாகப் மாநில அந்தஸ்து கோரிக்கை:

புதுச்சேரிக்கு 'மாநில அந்தஸ்து' வழங்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ரங்கசாமி பிடிவாதமாக உள்ளார். இதற்கு மத்திய அரசிடம் இருந்து தெளிவான உறுதிமொழியை அவர் எதிர்பார்க்கிறார். 

புதிய கட்சி மீதான அதிருப்தி:

லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய 'லட்சிய ஜனநாயக கட்சி'யை (LJK) கூட்டணியில் சேர்ப்பதை ரங்கசாமி கடுமையாக எதிர்க்கிறார். ஆனால், பா.ஜ.க இதில் தயக்கம் காட்டுவது அவரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

பேச்சுவார்த்தையைத் தவிர்த்த முதலமைச்சர்

தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச வந்த மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியாவை சந்திக்காமல் ரங்கசாமி தவிர்த்து வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சேலம் அப்பா பைத்தியசாமி ஆசிரமம், திருச்செந்தூர் புனிதப் பயணம் என அவர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டது, பா.ஜ.க-விற்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

"கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கும்போது முதலமைச்சர் இதுபோன்று பயணம் மேற்கொள்வது முறையல்ல" என ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ரங்கசாமியை விமர்சித்துள்ளார்.

புதிய கூட்டணிக் கணக்குகள்:

த.வெ.க-வுடன் கைகோர்க்குமா என்.ஆர். காங்கிரஸ்?பா.ஜ.க-வின் பிடிவாதம் தொடர்ந்தால், ரங்கசாமி ஒரு மாற்றுத் திட்டத்தை (Plan B) கையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

 தனித்துப் போட்டி:

30 தொகுதிகளுக்கும் தேவையான வேட்பாளர் பட்டியலை என்.ஆர். காங்கிரஸ் ஏற்கனவே தயார் செய்துள்ளது.  நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்துடன்' கூட்டணி அமைப்பது குறித்து ரங்கசாமி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. இது நடந்தால் புதுச்சேரி தேர்தல் களம் புதிய பரிமாணத்தைப் பெறும்.

எதிர்க்கட்சி முகாமிலும் குழப்பம்

ஆளுங்கட்சி மட்டுமன்றி, காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இழுபறியாகவே உள்ளது. புதுச்சேரியில் யார் தலைமை தாங்குவது? அதிக தொகுதிகளில் யார் போட்டியிடுவது? என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வேலை நாட்களே உள்ள நிலையில், புதுச்சேரியின் இரு பெரும் கூட்டணிகளும் இன்னும் இறுதி வடிவம் பெறாமல் தள்ளாடுகின்றன. முதலமைச்சர் ரங்கசாமியின் அடுத்தகட்ட நகர்வுதான் புதுச்சேரியின் அடுத்த அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்.