புதுச்சேரி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 3, 2026) புதுச்சேரியில் நடைபெறும் பிரம்மாண்ட சாலைப் பேரணியில் (Road Show) பங்கேற்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திவ்யா அறிவித்துள்ளார்.

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, புதுச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 3) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை சாலைப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்கிறார். இதையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யவும், புதுச்சேரி காவல்துறை போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்துள்ளது.

Continues below advertisement

முக்கிய கட்டுப்பாடுகள்:

பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்யும்போது, விவிஐபி (VVIP) செல்லும் வழித்தடத்தில் உள்ள சாலைகளில் எந்தவொரு வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படமாட்டாது.

லாஸ்பேட்டை விமானநிலைய சாலை முதல் லதா ஸ்டீல் சந்திப்பு வரை மற்றும் சிவாஜி சிலை சந்திப்பு முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் (ECR) வரை எல்லா கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

புஸ்ஸி வீதி வழியாகச் செல்லும் வாகனங்கள், கடலூர் சாலை - வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் திரும்பி நெல்லித்தோப்பு இந்திரா காந்தி சதுக்கம் வழியாகச் செல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி சதுக்கம் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் ஜிப்மர் சந்திப்பு (கோரிமேடு) வழியாக மேட்டுப்பாளையம் கனரக போக்குவரத்து முனையம் சாலைக்கு மாற்றப்படுகின்றன.

வாகன நிறுத்துமிடங்கள்:

நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் எந்த கனரக வாகனங்களும், பேருந்துகளும் அனுமதிக்கப்படமாட்டாது. விவிஐபி பாதை மற்றும் நிகழ்ச்சி நடக்கும் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவது தடை செய்யப்படும். விதிமுறைகளை மீறினால் வாகனங்கள் கிரேன் மூலம் அகற்றப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் கட்சியினரை ஏற்றிய பேருந்துகள் பின்வரும் இடங்களில் மட்டுமே இறக்க அனுமதிக்கப்படும்: ஜிஆர்டி அருகில் (காமராஜ் சாலை) இறக்கிவிட்டு, வள்ளலார் சாலை, 45 அடி சாலை, சாரம் சந்திப்பு வழியாக தட்டாஞ்சாவடி வேளாண்மை மைதானத்தில் நிறுத்த வேண்டும்.

கடலூர் சாலை - வெங்கடசுப்பா சிலை சந்திப்பு மறைமலை அடிகள் சாலை வழியாக வரும் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டு எஸ்இடிசி (SETC) பேருந்து நிலையம் (கடலூர் சாலை) நிறுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி சாலை உப்பளம் - சோனம்பாளையம் வழியாக வரும் பேருந்துகள், புதிய துறைமுக (உப்பளம்) நிறுத்துமிடத்துக்குச் செல்ல வேண்டும். பயணிகளை இறக்கியவுடன் உடனே ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடத்துக்குச் செல்ல வேண்டும்.

வாகன நிறுத்துமிட விவரம்:

  • உப்பளம் புதிய துறைமுகம்: அனைத்து வாகனங்களும்.
  • தட்டாஞ்சாவடி வேளாண்மை மைதானம்: பேருந்துகள் மற்றும் கார்கள்.
  • எஸ்இடிசி பேருந்து நிலையம்: பேருந்துகள்.
  • தாவரவியல் பூங்கா: கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள்.
  • அந்தோணியார் கோயில் மைதானம்: இருசக்கர வாகனங்கள்.
  • மகாத்மா காந்தி வீதி - மிஷன் வீதி இடைப்பட்ட சாலைகள்: இருசக்கர வாகனங்கள்.

அங்கீகரிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அகற்றப்படும். ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தங்களின் இருசக்கர வாகனங்களை ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து நடந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.