தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நபர் விஜய். 234 தொகுதிகளிலும் அவரது தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
நட்சத்திரத் தொகுதி பெரம்பூர்:
சென்னை திமுக கோட்டையாக திகழ்ந்து வரும் நிலையில் பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் தாக்கம் இருக்குமா? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திமுக சார்பில் நடப்பு எம்எஎல்ஏ ஆர்டி சேகரும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார்.
இதனால், இந்த தொகுதி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் உருவாகியுள்ளது. இந்த தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், விஜய் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பே பெரம்பூரில் பரப்புரையை மேற்கொண்டார்.
விஜய்க்கு எதிராக அன்புமணி:
இந்த சூழலில், விஜய் மற்றும் திமுகவிற்கு எதிராகவும், பாமக வேட்பாளர் திலகபாமாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நாளை பெரம்பூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். நாளை சைதாப்பேட்டை, அம்பத்தூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ள அன்புமணி இரவு 7 மணியளவில் பெரம்பூரில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனால், அன்புமணி ராமதாஸ் விஜய் மீது என்னென்ன விமர்சனங்களை முன்வைப்பார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக இந்த தேர்தலில் 18 தாெகுதிகளில் போட்டியிடுகிறது. சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
எதிர்பார்ப்பு:
முழுக்க முழுக்க வட தமிழகத்தில் மட்டும் போட்டியிடும் பாமக சென்னையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளில் பாமக களமிறங்குகிறது. அன்புமணி ராமதாஸ் மட்டுமின்றி பெரம்பூரில் விஜய்க்கு எதிராக களமிறங்கியுள்ள திலகபாமாவும் தொடர்ந்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பெரம்பூர் தொகுதியில் கோலாேச்சப்போவது யார்? என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக - நாம் தமிழர் - தவெக என நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. 234 தொகுதிகளிலும் இந்த கட்சிகள் மோதுவதால் இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.
