ராமதாஸ் தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த நிலையில் ஜி.கே.மணியால் குடும்பம் இரண்டாகி விட்டதாக அன்புமணி ராமதாஸின் மகள்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். 

பென்னாகரம் தொகுதியில் பேசிய அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகளான சங்கமித்ரா, என்னுடைய அம்மா சௌமியா தர்மபுரியில் வேட்பாளராக நிற்கிறார். நாங்கள் அவருக்காக தான் கடந்த ஒரு வாரமாக பரப்புரை மேற்கொள்ள வந்தேன். ஆனால் பென்னாகரத்தில் மிகப்பெரிய துரோகம் நடக்கிறது. அதைப் பற்றி நாம் மக்கள் கிட்ட பேச வேண்டும் என தோன்றியது. பென்னாகரத்தில் நாம் ஜெயித்தே ஆக வேண்டும். ஜி.கே.மணி துரோகம் செய்து விட்டார் என சொன்னார்கள். அந்த துரோகத்தை நாங்கள் கண்ணால் பார்த்தோம். 

எங்க குடும்பம் எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அய்யா ராமதாஸ் தான் எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். எனக்கு குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகி விட்டது. அந்த குழந்தையை கூட தாத்தா ராமதாஸை ஜி.கே.மணி பார்க்க விடவில்லை. அதைப்பற்றி கேட்க கூட இல்லை. ராமதாஸ் பேரன், பேத்தி என்றால் எப்படி இருப்பார் தெரியுமா?. இந்த துரோகி ஜி.கே.மணி பிள்ளை மட்டும் நல்லா இருக்கணும். எங்க குடும்பம் நல்லா இருக்கக்கூடாது என நினைக்கிறார். 

அவரைப் போல கேவலமான மனித பிறவியை பார்க்கவே முடியாது. அந்த துரோகத்துக்கு தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.மணி மகன் தமிழ்குமரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரை நீங்கள் எத்தனை முறை இங்கு வந்திருக்கிறார் சொல்லுங்கள். எங்க குடும்பத்தை பிரித்தவர்கள் எப்படி உங்க குடும்பத்தை நன்றாக வைத்திருப்பார்கள்?. இனிமேல் இந்த மாதிரியான துரோகிகள் பயப்பட வேண்டும்.

இந்த மாவட்டத்து பக்கமே அவர்கள் வர பயப்பட வேண்டும். இந்த சமூகத்தை உடைத்து விடலாம் என நினைத்தார்கள். அன்புமணி விடவில்லை. அவர் மக்களுக்காக நிற்கிறார். கடந்த ஓராண்டாக அன்புமணிக்கு நிறைய மன வருத்தம் ஏற்பட்டது. சொந்த மகனை நம்பாமல் வேறு யாரையோ நம்பும் அளவுக்கு ராமதாஸ் மனதை மாற்றி வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டிய எண்ணம் இல்லை. நாம் எப்போதும் துரோகியை எதிர்ப்பவர்கள். மனசெல்லாம் நஞ்சு எண்ணமாக உள்ளது. 

அதை நினைத்தாலே நாங்கள் அழ ஆரம்பித்து விடுவோம். வார்த்தையே வரவில்லை. எங்கள் குடும்பத்துக்கு நியாயம் நீங்கள் போடும் வாக்குகளில் தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாகவே ராமதாஸ் - அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. இரண்டு பேரும் பாமக தங்களுக்கே சொந்தம் என கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வந்தது. இதில் அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. ராமதாஸ், புதிதாக கட்சி தொடங்கிய சசிகலாவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.