Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
PMK Ramadoss: பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

PMK Ramadoss: சேலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த ராமதாஸ் சர்க்கரை அளவு மற்று ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக மேடையிலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அட்மிட்
பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி உடனான மோதல் காரணமாக, பல தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். அந்த வகையில் சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான அருளை வேட்பாளாராக அறிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பள்ளப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்படும்போது திடீரென நிலை தடுமாறிய அவரை, அக்கம்பக்கத்தினர் உடனடியாக தாங்கி பிடித்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற்னர். அங்கு இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், உயர் சிகிச்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் இன்று கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்
நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்..
ராமதாஸ் தொடர்பான தகவலறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக அவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். அப்போது தேவையான உரிய சிகிச்சைகளை வழங்க மருத்துவர்களுக்கு வலியுறுத்தியதகாவும் கூறப்படுகிறது.
மூன்றவாது மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராமதாஸ்
மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ் உடனடியாக சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு உயர் சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . வயது மூப்பு, வெயில் நேரத்தில் அலைச்சல், உடலில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாகவே ராமதாஸ் நிலைதடுமாறியதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனைக்கு ராமதாஸ் கொண்டு வரப்பட்டார். அங்கு அவருக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான உயர்ரக சிகிச்சைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அவருக்கு வயது 86 என்பது குறிப்பிடத்தக்கது.
தொண்டர்கள் அதிருப்தி.. அன்புமணி ஆவேசம்
ராமதாஸ் மயங்கி விழுந்தது மற்றும் உடல்நிலை தொடர்பான தகவல்கள் பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விருத்தாசலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த அன்புமணியிடன் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கவலையுடன் கோபம் கலந்த தொனியில் பேசிய அவர், “ஐயாவிற்கு ஏதாவது ஆச்சுன்னா, இவர்களை நான் சும்மா விடமாட்டேன்” என அன்புமணி பேசியுள்ளார்.
கட்சியில் யாருக்கு அதிகாரம் மற்றும் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதால், பாமக கட்சி மற்றும் மாம்பழம் சின்னம் ஆகிய இரண்டுமே தற்போது அவர் வசமே உள்ளது. இதன் காரணமாகவே பாமக தனது ஆதரவாளர்களை வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் சுயேச்சை சின்னத்தில் களமிறக்கி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















