Anbumani: முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்; திமுக கூப்பனை வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி குற்றச்சாட்டு
முதல்வரைச் சுற்றி அமைச்சர்கள் என்ற போர்வையில் 4 வியாபாரிகள்; 8 ஆயிரம் வாங்க 3 ஆயிரம் லஞ்சம்- அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு.

திமுக சொல்வது போல அவர்கள் வெற்றி பெற்றாலும், திமுகவினர் கொடுக்கும் 'கூப்பனை' வாங்க 3000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆற்காடு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சுகுமாருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கார்த்திகேயனுக்கு தாமரை சின்னத்திலும் அன்புமணி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
’’முதலமைச்சர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 8000 கூப்பன் கொடுப்போம் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் 2 கோடி குடும்பங்கள் இருக்கின்றன. ஆனால் திமுக வெற்றி பெற்றால் 10 லட்சம் பேருக்கு மட்டும்தான் கூப்பன் கொடுக்கும்.
அந்த கூப்பனை வாங்க திமுககாரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் நாம் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆனால் அதிமுக வெற்றி பெற்றால் இபிஎஸ் பத்தாயிரம் ரூபாய் பணமாக கையில் கொடுப்பார். அது மட்டுமில்லாமல் ஒரு பிரிட்ஜ் கொடுக்க இருக்கிறார்.
ராணிப்பேட்டையில் தொழிற்சாலை கழிவுகள்
35 ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை சிப்காட்டில் மூடப்பட்ட குரோமியம் தொழிற்சாலையின் கழிவுகள் 2.5 லட்சம் டன் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. அதை அகற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராணிப்பேட்டையை சுற்றி இருக்கக்கூடிய மக்கள் குடிக்கக்கூடிய தண்ணீரில் குரோமியத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. ராணிப்பேட்டை பகுதியில் இருக்கும் அமைச்சர் காந்தி இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தூக்கத்தில்கூட பாஜக என்று புலம்பும் ஸ்டாலின்
ஸ்டாலின் வார்த்தைக்கு வார்த்தை பிஜேபி.. பிஜேபி.. என்கிறார் ஏன் பிஜேபியை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்.. தூக்கத்தில் கூட பிஜேபி பிஜேபி என ஸ்டாலின் புலம்பி கொண்டு இருக்கிறாராம்..யாராவது தும்மினால் கூட அதற்கு காரணம் பிஜேபிதான் என ஸ்டாலின் சொல்வார்.
எங்கள் கூட்டணியில் மத்திய பாஜக அரசாங்கம் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தேவையான அத்தனை திட்டங்களையும் முதலமைச்சராக இபிஎஸ் பெற்றுக் கொடுப்பார்.
ராணிப்பேட்டை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழியாக ஒன்றரை லட்சம் டன் அளவுக்கு கஞ்சா வருகிறது.
முதல்வரைச் சுற்றி 4 வியாபாரிகள்
முதலமைச்சரை சுற்றி அமைச்சர்கள் என்ற போர்வையில் நான்கு வியாபாரிகள் இருக்கிறார்கள். எ.வ. வேலு, சேகர்பாபு, கே.என். நேரு, செந்தில் பாலாஜி போன்றோரெல்லாம் பணத்தை கொள்ளையடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மோசடி கும்பலை விரட்டி அடிக்க வேண்டும்.
ஒரு ஊருக்குள் திருடன் வந்தால் எப்படி அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து விரட்டி அடிப்போமோ அதுபோல அனைவரும் சேர்ந்து இந்த திமுக கும்பலை விரட்டியடிக்க வேண்டும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.





















