PM Modi: பிரதமர் மோடியின் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டங்களில், பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.


பிரதமரின் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம்:


நாடாளுமன்ற மக்களவைத்  தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிப்பதற்காக, பாஜகவின் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் தொடங்கி, 4 மணி நேரம் வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜேபி நட்டா உடன் மத்திய அமைச்சர்களான அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். மூத்த தலைவர்களான தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, ஜோதிராதித்ய சிந்தியா,  யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே, அமித் ஷா மற்றும் நட்டா உடன், பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனியே ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.


தயாராகும் வேட்பாளர்கள் பட்டியல்:


தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே பாஜக சார்பில், கணிசமான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை இன்னும் தொகுதிப் பங்கீட்டையே இறுதி செய்யாத எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணிக்கு அழுத்தமாக அமையும் என பாஜக கருதுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் முதன்மையான மூன்று வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்ட குறுகிய பட்டியலை தயாரிக்கும் பாஜக, மார்ச் 10 ஆம் தேதிக்கு முன்னதாக 50 சதவீத மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.


மாநில வாரியான விவரங்கள்:


நடந்து முடிந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பஞ்சாபில் அகாலி தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி & ஜன சேனா மற்றும் தமிழகத்தில் அதிமுக ஆகிய மூன்று மாநிலங்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, பஞ்சாப், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு முடிவுகளை பாஜக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேர்தலுக்கான பாஜகவின் திட்டம்:


கடந்த 2019 பொதுத் தேர்தலின்போதும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு மார்ச் 21 அன்று பாஜக 164 வேட்பாளர்களை அறிவித்தது.  இந்த பட்டியல் கட்சி "வெற்றி பெறுவதற்கான கணக்கெடுப்பு" என்று பாஜக குறிப்பிடுகிறது. இதனிடையே,  மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீட்டு செயல்முறையை விரைவில் முடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதன்படி,  மகா விகாஸ் கூட்டணியின் தலைவர்கள் இன்று மாலை மும்பையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.