PM Modi: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Continues below advertisement

வாக்களிக்கச் சென்ற பிரதமர் மோடி:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 93 தொகுதிகளில் மூன்றாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,  குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில், பிரதமர் மோடி வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். இதற்காக நேற்றே குஜராத் சென்ற பிரதமர் மோடி, மாநில ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்தார். தொடர்ந்து, இன்று காலை வாக்களிகக்ச் சென்ற போது பிரதமருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோடியை வரவேற்ற பாஜக தொண்டர்கள்:

  • வாக்குச்சாவடிக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்பே மோடி வாகனத்தில் இருந்து இறங்கி, நடைபயணத்தை தொடர்ந்தார்
  • காந்தி நகர் வேட்பாளரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பிரதமரை வரவேற்றார்
  • சாலையில்ன் இருபுறமும் பாஜக கொடிகள் பறக்கும் கம்பங்கள் இருக்க, ஏராளமான பாஜக ஆதரவாளர்களும் அங்கு குவிந்திருந்தனர்
  • மோடியின் உருவம், பாஜக சின்னமான தாமரையின் படம் அடங்கிய புகைப்படங்களை ஏந்தியவாறு, இசைவாத்தியங்கள் இசைத்தபடி சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவர்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.

ஆட்டோகிராஃப் & போட்டோகிராஃப்:

  • ஊர்வலத்தின் போது தனது உருவத்தை அட்டையில் வரைந்து வைத்து இருந்த நபர்களுக்கு மோடி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்
  • சிறுமி ஒருவருடன் அன்புடன் பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்
  • வாக்குச்சாவடிக்குள் செல்லும் முன்பு அங்கு இருந்த மூத்த தலைவர் ஒருவரது காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்றார்
  • வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரிகளிடம் தனது ஆவணங்களை காட்டினார். அப்போது அதிகாரிகள் எழுந்து நின்று அவருக்கு மரியாதை அளித்தனர். பிறகு மோடி வாக்களித்தார்
  • வெளியே வந்து வாக்களித்ததற்காக கையில் வைக்கப்பட்ட மையை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டார்
  • அங்கிருந்து மீண்டும் நடைபயணமாக சென்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வெயில் அதிகமாக இருப்பதால், அடிக்கடி தண்ணீர் பருகி வேலையை பாருங்கள் என அறிவுரை வழங்கினார்.

காவலரை முறைத்த மோடி:

  • தொடர்ந்து, மை பூசப்பட்ட விரலை காட்டியவாறு மோடி நடைபயணமாக சென்று சாலையின் இருபுறமும் குவிந்து இருந்த மக்களை சந்தித்தார்
  • சாலையோரம் ஒரு பெண்ணிடம் இருந்த கைக்குழந்தையை வாங்கி கொஞ்சிய அவர், குழந்தையை லேசாக காற்றில் தூக்கி போட்டு பிடித்து விளையாடி மகிழ்ந்தார்
  • அப்போது அங்கிருந்த பார்வைத்திறன் குறைபாடு கொண்ட சிறுமிக்கு அருகில் சென்று பேசினார். அங்கு பலரும் மோடியின் கைகளை பிடிக்க, காவலர் விரைந்து சென்று அவர்களை தடுக்க முயன்றார். ஆனால், பிரதமர் மோடி முறைக்கவே காவலர் அங்கிருந்து உடனடியாக நகர்ந்து சென்றார். பின்பு, பொதுமக்களிடம் பொறுமையாக உரையாடிவிட்டு, பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

இதனிடையே, வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி பேரணியாக சென்று, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.