தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னாளில் அமைச்சர்களாக மாற வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில் பாஜக தமிழ்நாடு மாநில தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழ்நாடு மாநில தேர்தல் மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்,பாஜக தேசிய மகிளா மோர்ச்சா தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “வரும் சட்டமன்ற தேர்தலில் இங்கிருக்கும் பாஜகவினர் 20 முதல் 30 இடங்களைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக செல்வீர்கள் என நம்பிக்கை தெரிவித்தார். சிலர் அமைச்சர்களாக கூட ஆகலாம். உண்மையில் அது நடக்கும் என நம்புகிறேன். மக்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் நடக்கும். ஊடகத்தினர் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை புகழ்ந்து பேசி வருகிறீர்கள்.
ஆனால் நடந்த சம்பவத்தை வெளிப்படையாக பேசி ஊடக தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாஜக எம்ஜிஆர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வழியில் மக்கள் எதிர்பார்க்கும் கட்சியாக, நல்லது செய்யும் கட்சியாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகுவிரைவில் திமுக ஆட்சி கவிழும். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் பேசுபொருளாக அரசியல் உலகில் மாறியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்க தயாராக உள்ளதாக என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதேசமயம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்தால் அதிமுக தலைமையில் தான் அரசு அமையும் என திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். ஆனால் நயினார் நாகேந்திரன் கருத்து என்ன பிளானில் பாஜக உள்ளது என்ற கேள்விகளை உண்டாக்கியுள்ளது. இதனிடையே நயினார் நாகேந்திரனின் கருத்துகளுக்கு பதிலளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன், பாஜக தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்க அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அதை பெரிதுப்படுத்த தேவையில்லை என கூறியுள்ளார்.