வரும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலைச் சந்திக்கவுள்ள I.N.D.I.A கூட்டணிக் கட்சிகள் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இன்று அதாவது பிப்ரவரி 12ஆம் தேதி திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவைச சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொ. திருமாவளவன் பேசுகையில், “ திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், விசிக மூன்று தனித் தொகுதிகளிலும், ஒரு பொதுத் தொகுதியிலும் போட்டியிட கோரிக்கை விடுத்தள்ளோம். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளும் கூட்டணி வெல்ல என்ன மாதிரியான தேர்தல் பணி செய்யவேண்டும் என பேசினோம்” எனக் கூறினார்.
மேலும் அவர், “ தமிழ்நாட்டின் சமகால அரசியல் நிலவரம் குறித்தும், பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்தும் பேசினோம். 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இயங்கி வருகின்றது. அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி பல தேர்தலைச் சந்தித்த கூட்டணி என்றால் அது திமுக கூட்டணியாகத்தான் இருக்க முடியும். எந்த மாநிலத்திலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாக பயணிப்பது இல்லை. தமிழநாட்டில் பாஜக தலைமையில் அதிமுக கூட்டணி உருவானது, ஆனால் அது இன்றைக்கு எப்படி சிதறிக்கிடக்கின்றது என நாம் அறிவோம். அவ்வாறு இல்லாமல் கொள்கை சார்ந்த கூட்டணியாக திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி விளங்கி வருகின்றது. அது I.N.D.I.A கூட்டணி எனும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. அகில இந்திய அளவில் 28 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இந்த கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கின்றது.
அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் என்ற செயல் திட்டத்தை முன்வைத்து I.N.D.I.A கூட்டணி இயங்கி வருகின்றது. இந்த கூட்டணி உருவாகவேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்து பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. அகில இந்திய அளவில் பல தலைவர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டியுள்ளது. திமுக தலைமையில் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு கூட்டணி அமைய வேண்டும் என விசிக பல மேடைகளில் வலியுறுத்தி வந்தது. எனவே I.N.D.I.A கூட்டணி உருவானதில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு பங்கு உள்ளது. I.N.D.I.A கூட்டணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்பட்டுவிடக்கூடாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எங்களது கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எனவே அடுத்தகட்ட பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிகள் என்னென்ன என அப்போது தெரிவிப்போம்” என பேசினார்.